தருண் விஜய் அம்பு எய்தவர் அமித் ஷா-பாலமுரளிவர்மன்

தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விஜய்க்கு தமிழ் வணக்கம்..

கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை நடத்திய நிகழ்வு.

மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் அவ்வை நடராசனும்
முனைவர் திருவாசகமும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள்.
பின்னவர் இந்தியிலும் (எழுதிவைத்து)படித்து தான் ஒரு தமிழன் என்பதை உறுதிப்படுத்தினார்.

நாம் கவனிக்கவேண்டியது இதை அல்ல.

பா.ஜ.க வின் மாநிலங்களவை உறுப்பினர்க்கு ஏற்பட்டிருக்கும் தமிழ்ப் பற்றை பாராட்டுவோம்.
அவருக்கு அரசியல் உள் நோக்கம் இருந்தாலும் கூட தமிழுக்காக வடக்கில் ஒரு குரல் ஒலிப்பதை நாம் வரவேற்கலாம்.

அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் நுழைவாயிலாக அவர் தமிழை எடுத்துவருகிறார் என்கிற புரிதலோடு நாம் பாராட்டவேண்டும்.

எதிரி ஆயினும் நல்ல குணங்களை கொண்டிருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

எச்சரிக்கையோடு இருக்கவும் வேண்டும்.
குழந்தை முகம் கொண்ட தருண் விஜயை அமித் ஷா தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுவது தெரிகிறது.

தருண் விஜய் நல்ல பேச்சாளர்.
தன் கருத்தை மிக அழகாக பதிவு செய்கிறார்.தேர்ந்த நடிப்பு கலைஞனின் உடல்மொழி.அரங்கத்தை கவரும் வெளிப்பாடு.

ஆர்.எஸ்.எஸ் அளித்திருக்கும் ஆழமான பயிற்சி.

ஆர்.எஸ்.எஸ்ஸோடு நமக்கு கோட்பாட்டு முரண் இருந்தாலும்
ஒரு செயல் வீரனை அவர்கள் உருவாக்கும் பாங்கு,
அவனை ஒரு கருத்தடிமையாக்கி ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து பிறழாமல் நிற்கசெய்யும் நெறிமுறை ஆகியவற்றை கவனிக்கவேண்டும்.

தமிழர்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்க அவனது மொழியையும் வரலாறையும் பெருமைப் படுத்திப் பேசவேண்டும் என்று சொல்லித் தரப்பட்ட பாடத்திட்டத்தோடு தருண் விஜய் வந்திருப்பது புரிகிறது.

அவர் கேட்கிறார்,
தமிழ்நாட்டில் தமிழ் வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை.வெட்கமாயில்லை.?

நாங்கள் தமிழர்கள்.எங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்ல வெட்கமாயில்லை.?

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் தமிழ் மத்தியில் ஆட்சி மொழி ஆகவில்லை என்பது வேதனையாக இல்லை.?

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை.தீர்ப்பு ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது.நீங்கள் யாருக்கு தீர்ப்பு வழங்குகிறீர்கள்?
இங்கிலாந்து ராணிக்கா?இங்கிருக்கும் படிக்காத ஏழைக்கா?

இது சுதந்திர இந்தியாவா?பிரிட்டிஷ் இந்தியாவா?

எல்லாம் சரி அய்யா.இதை யாரிடம் கேட்கிறீர்கள்?
பல காலமாக இதைத் தான் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.இப்போது திடீரென முளைத்து அதையே எங்களிடம் கேட்கிறீர்கள்.

தருண் மேலும் சொல்வது,

திருக்குறள் இந்தியாவின் நூல்.
இப்போது புரிகிறதா?

அசோகர் மட்டுமல்ல.
ஹர்ஷர் மட்டுமல்ல.
சேர சோழ பாண்டியர்கள் தமிழ்ப் பேரரசர்கள் மட்டும் அல்ல.அவர்களும் இந்தியப் பேரரசர்கள்தான்..
ஏழு கடல் கடந்து ஆட்சி செய்த ராசேந்திர சோழனும் சேரனும் பாண்டியனும் விஜயநகர பேரரசர்களும் இந்தியப் பேரரசர்கள்.
இப்போது
அவர் யாரென்று தெரிகிறதா?

இமயம் உயர்வானது.இமயத்தினும் உயர்ந்தவள் என் தமிழன்னை.

வாருங்கள்.தமிழுக்காக சேர்ந்து போராடுவோம்.
ஒற்றுமைமிக்க வலிமையான ஒரே இந்தியாவை உருவாக்குவோம்.
என்கிறார் தருண் விஜய்.

அவர் அம்பு.
எய்தவர் அமித் ஷா வாகத் தான் இருக்க முடியும்.

வெடித்துப் பரவும் தமிழ்த் தேசிய எழுச்சியை தன்வயமாக்க முனைகிறது பா.ஜ.க.

தமிழையும் தமிழர் வரலாறும் பேசினால் போதும் எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம்.இது வரை அப்படித்தான் தமிழர் அரசியல் இருந்திருக்கிறது
என்று கருதுகிறது காவி கும்பல்.

அமித் ஷா அவர்களே,
நீங்கள் திட்டமிடுவதில் வல்லவராக இருக்கலாம.உங்கள் நண்பரை பிரதமராக்கியிருப்பதால் உங்கள் திட்டம் எப்போதும் பலிக்கும் என்று எண்ணாதீர்கள்.

உங்கள் இலக்கு 2016 தேர்தல்.
எங்கள் இலக்கு இனத்தின் விடுதலை.

இனி,
இங்கு தமிழனே ஆள்வான்.
அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

உங்கள் திட்டங்கள் இந்தியர்களுக்கானது.தமிழர்களிடம் செல்லாது.

இனம்போன்று இனம் அல்லார் கேண்மை
மகளிர் மனம்போன்று மாறுபடும்
என்பது எங்கள் அய்யன் வள்ளுவப் பெருந்தகை காட்டிய எச்சரிக்கை.

உங்கள் நாடகக் குழுவின் திரைச்சீலையை சுருட்டிக்கொண்டு நடையைக் கட்டுங்கள் அமித் ஷா.

தமிழுறவுகளே கவனம்.
நரி நீலச் சாயத்துடன்
வந்திருக்கிறது.

தமிழ்த்தேசியப் பெருவெள்ளம் அதை வெளுக்கும்.

Leave a Response