இந்தியா பாகிஸ்தான் — திரைப்பட விமர்சனம்.


நாயகன் விஜய்ஆண்டனி நாயகி சுஷ்மாராஜ் ஆகிய இருவருக்குமிடையே இந்தியா பாகிஸ்தான் மாதிரி போர் நடந்துகொண்டேயிருக்கிறது. கடைசிவரை அந்தப்போட்டியை வைத்தே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்.
ஒரே அலுவலகத்தைப் பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழலில் யாருக்கு முதலில் வழக்கு கிடைக்கிறதோ அவருக்கே அந்த அலுவலகம் சொந்தம் என்று பந்தயம் கட்டிக்கொள்கிறார்கள், இதற்காக அவர்கள் வழக்கைத் தேடி அலையும் காட்சிகளைப் பார்த்தால் நமக்கெல்லாம் சிரிப்பு வருகிறது. அந்தக் காட்சிகளில் வழக்குரைஞர் தொழிலின் கஷ்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? வழக்குரைஞர் தொழிலைக் கேவலப் படுத்தியிருக்கிறார்களா? என்று பட்டிமன்றமே வைக்கலாம். அதுவும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வழக்குப் போட வந்தவர் என்றெண்ணி விஜய்ஆண்டனி அணுகும் காட்சியில் கதாநாயகி மட்டுமல்ல மக்களும் சிரிக்கிறார்கள்.
அழுத்தமான வேடங்களுக்குப் பொருந்திப்போன விஜய்ஆண்டனி. நகைச்சுவைப்படத்துக்குப் பொருந்தவில்லை.
அறிமுகநாயகி சுஷ்மாராஜ் நன்றாக இருக்கிறார். கொடுத்த வேடத்தைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன் நடித்திருக்கிறார். விஜய்ஆண்டனியுடன் அவர் போடும் சண்டைகள் நன்றாக இருக்கின்றன. காதலைச் சொல்லிவிட்டுக் கலங்கும் காட்சியும் நன்று.
கிராமத்து முக்கியப்புள்ளியாக வருகிற பசுபதிக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி இந்தப்படம் அமைந்திருக்கிறது. இன்னொரு முக்கியஸ்தரான எம்.எஸ்.பாஸ்கர் எதற்கெடுத்தாலும் ஆத்தாவைக் கும்பிடுவதும் கூடவே இருந்து மனோபாலா மணியாட்டுவதும் கலகலப்பு. இவர்கள் தங்களுடைய நிலச் சிக்கலுக்காக வழக்குப் போட நகரத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருகிற காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கின்றன.
கிராமத்தில் நாயகி சுஷ்மாராஜை அம்மன் ரேஞ்சுக்குக் கொண்டாடுவது, அவரை வைத்துப் பேய் ஓட்டுவது என்று கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் சிரிக்கவைக்கின்றன.
வீட்டுத் தரகராக வருகிற ஜெகன், நாயகனின் நண்பராக வருகிற காளி. கிராமத்து மனிதர்கள் ஆகியோர் வஞ்சனையில்லாமல் சிரிக்க வைக்கிறார்கள்.

விஜய்ஆண்டனி சுஷ்மாராஜ் ஆகிய இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் பசுபதியின் மகனும் எம்.எஸ்பாஸ்கரின் மகளும் காதலிப்பதும் அந்தக்காதலை இவர்கள் சேர்த்துவைக்கப் பாடுபடுவதும் விஜய் நடித்த குஷி படத்தை நினைவுபடுத்துகிறது.

படத்தில் காதலுக்குமரியாதை டிவிடியை வைத்து ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை.
விஜய் படத்தின் காட்சிகள் பாடல்கள் ஆகியனவற்றைப் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை உருவாக்கியது போல் தெரிகிறது.

Leave a Response