அவர் தலைவர் ஆன நாள் இது! – கலைஞர் பொன்விழா சிறப்பு

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்று இன்றோடு ஐமப்து ஆண்டுகளாகின்றன. அதையொட்டி அவருக்குப் பல்வேறு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர் திருமாவேலனின் கலைஞர் பற்றிய பதிவு…..

திருக்குவளையில் பிறந்து-

திருவாரூரில் படித்து-

விழுப்புரத்தில் நாடகம் போட்டு-

புதுச்சேரியில் தாக்கப்பட்டு-

ஈரோட்டில் பத்திரிக்கையாளராக உருப்பெற்று-

கோவையில் கதைவசன கர்த்தாவாக மாறி-

சேலத்தில் முழு சினிமாக்காரராகவே பரிணாமம் பெற்று-

சென்னையில் தி.மு.க.பிரசாரக்குழுச்செயலாளர் பதவியைப் பெற்று-

கோவில்பட்டியிலும் தூத்துக்குடியிலும் கட்சியைத் தொடங்கி வைத்து-

திருச்சியில் அண்ணாவுக்குப் பதிலாகப் பேசி-

தஞ்சை மாவட்டம் முழுக்க 26 நாட்கள் தொடர்ந்து அலைந்து கட்சியை வளர்த்து-

திருவையாற்றில் கறுப்புக் கொடி பிடித்து-

சென்னை மாநில மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆகி-

கல்லக்குடி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து-

திருச்சி சிறையில் சிற்றவதைப்பட்டு-

நாகையில் போட்டியிட வலம் வந்து-

குளித்தலையில் போட்டியிட்டு-

சேலம் தொடங்கி பல்வேறு ஊர்களில் உதயசூரியன் நாடகம் போட்டு-

நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராடி-

முதுகுளத்தூருக்கு விசாரணைக்குப் போய்-

பரமக்குடி சிவகங்கையில் கட்சியை வளர்த்து-

தேவகோட்டை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து-

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றி-

அதற்காக அண்ணா அணிவித்த மோதிரத்தை சேலத்தில் தொலைத்து-

அதை திருச்சி காமாட்சி எடுத்துக்கொடுத்து-
தஞ்சாவூர் தொகுதியில் வென்று-

சிதம்பரம் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செயல்திட்டக்குழுத் தலைவர் ஆகி-

திருவண்ணாமலை இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்து-

சென்னைக் கடற்கரையில் 10 லட்சம் ரூபாய் சபதம் ஏற்று –

நெல்லை இந்தி எதிர்ப்புப் போராட்டக்
களத்துக்குத் தலைமை வகித்து-

சென்னையில் அன்பகம் கட்டி-

தடுப்புக்காவல் சட்டப்படி கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு-

திருப்புமுனை மாநாடாம் விருகம்பாக்கம் தேர்தல் மாநாட்டு இடத்தைச் செம்மைப்படுத்தி-

சைதாப்பேட்டையில் நின்று வென்று தமிழகச் சட்டமன்றத்துக்குள் போனதால் தான் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் வசமானது தமிழ்நாடு!

அவர் தலைவர் ஆன நாள் இது!

மூடிய காதுக்குள்ளும் செல்லும் குரல்! அது நூறாண்டுகள் கழித்தும் வெல்லும் சொல்!

– திருமாவேலன்

Leave a Response