கலங்கி நின்ற ஸ்டாலின், கதறிய தொண்டர்கள் – 27 ஆம் தேதி இரவு என்ன நடந்தது?

ஜூலை 27 காலையிலிருந்தே கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள். இரவும் அது நீடித்தது. 27 அன்று இரவு கோபாலபுரத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்டார் கலைஞர். அந்த இரவில் நிகழ்ந்தது என்ன? என்பது பற்றி நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் கூறியிருப்பதாவது….

“இன்னைக்கு நைட்டு அறிவிச்சிடுவாங்களா? அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே, ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே?” –மாலையிலிருந்து தொடர்ச்சியாக வந்த அலைபேசி அழைப்புகளைக் கடந்து, இரவு 10.15 மணி வாக்கில் கோபாலபுரம் சென்றேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோர் நலன் விசாரித்துச் செல்ல, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற நிர்வாகிகளும் கலைஞரின் இல்லத்திலிருந்து புறப்பட்டனர். நக்கீரன் ஆசிரியர் கோபாலண்ணன் வருகைக்காக அங்கேயே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் வந்தார்.

வழக்கம்போல கோபாலபுரம் இல்லத்தில் உள்ளவர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தபோது, நேற்றைக்கு இன்று பரவாயில்லை என்றனர். டாக்டரும் வந்து பார்த்துவிட்டு, அருகிலுள்ள முரசொலி செல்வம்-செல்வி வீட்டிற்கு சென்றார். அவர்கள் வீட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்த்தால், அங்கு சென்றோம். “தலைவருக்கு காய்ச்சல் இல்லை. இன்ஃபெக் ஷன் குறைந்து வருகிறது” என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்ன முரசொலி செல்வம், “இன்று கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம்” என்றார்.

வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில், ‘கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை’ என பிரேக்கிங் நியூஸ் வெளியானது. இரவு மணி 11.50. சந்திர கிரகண நேரம்.

கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டேன். “தலைவருக்கு ரொம்ப முடியலை..” என தழுதழுத்த குரலில் சொன்னார்கள். மீண்டும் நக்கீரன் கோபாலண்ணனுடன் விரைந்தேன்.

வாசலில் உடன்பிறப்புகளின் வாழ்த்து முழக்கம் நிற்காமல் ஒலித்தது. மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி தொடங்கி தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் மாடியில் இருந்தனர். கீழே இருந்தவர்கள் பேச வார்த்தைகளின்றி கலங்கி நின்றனர்.

சிறிது நேரத்தில், கலைஞரை ஸ்ட்ரெச்சரில் கீழே கொண்டு வந்தார்கள். அவருக்கு இதயத்துடிப்பு அளவு குறைந்திருந்தது. எங்கள் எல்லோருக்கும் இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தோர் கதறிக் கொண்டிருந்த நிலையில், படுக்கையில் இருந்த கலைஞரின் வாய் அசைவதைப் பார்க்க முடிந்தது. “உடன்பிறப்பே…” என்று ஓசையில்லாமல் சொல்வதுபோல அந்த அசைவு இருந்தது. எங்கள் கண்களில் வழிந்த நீர் அவருக்கு ‘வாழ்க’ சொன்னது.

இரவு 1.30. வெளியில் காத்திருந்த உடன்பிறப்புகளின் வாழ்த்து முழக்கம் மேலும் அதிகரித்தது. கலைஞரை ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட எல்லோரும் உறைந்து நின்றனர்.

யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை. யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லும் நிலையிலும் இல்லை. எனக்கோ, அந்த வாயசைவின் காரணத்தை அறிய வேண்டும் என்ற துடிப்பு. கோபாலண்ணனிடமும் அதே ஆர்வம்.

எல்லோரும் மருத்துவமனைக்குப் புறப்பட்டார்கள். நானும் அண்ணனும் செய்வதறியாது கோபாலபுரம் வீட்டிலேயே நின்றோம். உள்ளே இருக்கும் எங்களுக்கு வெளியிலிருந்து ஊடக நண்பர்களின் குறுஞ்செய்திகள் வந்தபடி இருந்தன. “இனி மறைப்பதற்கு எதுவுமில்லை.. அவ்வளவுதான்”
“சந்திர கிரகணம் முடிந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும்” –என அதிதீவிர தகவல்கள் வெளிப்பட்டன.
அந்த நேரத்தில் மருத்துவர் எழிலன் உள்ளேயிருந்து வந்தார். “என்ன டாக்டர்?” என்றேன் பதற்றமாக.
“பி.பி. குறைஞ்சிடிச்சி.. மருந்து ஏத்தணும். அதுக்கு இங்கே வசதியில்லை.. ஆஸ்பிட்டல் கொண்டு போறோம்” என்றார். அவ்வளவுதானா..? நம்பவே முடியவில்லை. டாக்டரின் வார்த்தைகள்.. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இரவு 1.45 கோபாலபுரத்திலிருநது ஆழ்வார்பேட்டை விரைந்தோம். கோபாலபுரமே இடம்பெயர்ந்ததுபோல, அங்கு குவிந்திருந்த தொண்டர்கள், இங்கே திரண்டு அதே வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பைக் கடந்து கோபாலண்ணனுடன் மருத்துவமனைக்குள் சென்றேன். அங்கிருந்த எல்லோர் முகத்திலும் பதற்றம்.

“தலைவர் வாய் அசைச்சதைப் பார்த்தீங்களா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். கோபாலபுரத்தில் இருந்த கலைஞரின் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் அவருடைய ஓசையில்லாத வார்த்தை உரக்கக் கேட்டிருப்பதை உணர முடிந்தது.

இரவு 2.10 மணி. வார்டிலிருந்து சகோதரர் ஆ.ராசா வெளியே வந்தார். “stable.. normal” என்று உற்சாகமான குரலில் சொன்னார். “நல்லா ஆயிட்டாரு..” என்ற அவரது வார்த்தை, அங்கிருந்த அத்தனை பேரின் உயிரையும் மீட்டது. மருத்துவமனையின் அமைதி கெடாதபடி, மெல்ல கைதட்டி மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில், மருத்துவமனை சார்பிலும் கலைஞரின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானது.

வாசலில் திரண்டிருந்த உடன்பிறப்புகளிடமிருந்து வாழ்த்து முழக்கங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. உண்மையிலேயே அதுதான் கலைஞரை ’stable’ ஆக்கிய அருமருந்து.

சிறிது நேரத்தில், பி.பி. 120/80 என்ற இயல்பு நிலைக்கு வந்துவிட்டதையும், சோடியம் அளவு குறைந்ததால், ரத்த அழுத்தம் 40க்கு கீழே போய், கலைஞருக்கு இந்தத் திடீர் பின்னடைவு ஏற்பட்டது என்றும், தற்போது சீரான உடல்நலத்துடன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மணி 3. சந்திர கிரகண நேரம் முடிந்திருந்தது. டாக்டர் எழிலன் வெளியே வந்தார்.. “நல்லா இருக்காரு.. stable” என்றார். சந்திர கிரகணம் முடிந்ததும் ‘அறிவிக்கப்படும்’ என நினைத்திருந்தவர்கள், வழக்கம்போல சூரியோதயத்தை எதிர்பார்க்கும் வேளை வந்தது.

அதிகாலை 4 மணி. டே-நைட் மேட்ச்சுக்குப் பதிலாக, இப்படி முழு நைட் மேட்ச் ஆடிட்டாரேய்யா இந்த மனுசன். கடைசி ஓவர்னு எல்லோரும் பயமுறுத்துற நேரத்திலும் இப்படி அசராம சிக்ஸரா அடிச்சி, நமக்கு சிவராத்திரி ஆக்கிட்டாரே என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினேன்.

இயற்கை எல்லோருக்கும் நாள் குறிக்கும். யாரும் விதிவிலக்கல்ல. கலைஞரோ அந்த நாளையும் நானே குறித்துக் கொள்கிறேன் என்பதுபோல சந்திர கிரகணத்தை விரட்டியடித்து, மருத்துவ அறிவியலின் துணையுடன் அடுத்த நாள் காலையில் திராவிட சூரியனாகப் புலர்ந்தார்.
மருத்துவமனை வாசலில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவரது உயிர்த் துடிப்பான உடன்பிறப்புகளின் குரல்
“வாழ்க வாழ்க வாழ்கவே.. டாக்டர் கலைஞர் வாழ்கவே…”

Leave a Response