கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக தோல்வி வாக்கு சதவீதமும் குறைந்தது

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக விஜயகுமார் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டு இருந்தார்.

அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜயகுமார் கடந்த மே மாதம் 4-ந் தேதி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஜூன் 11-ந் தேதி (நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களத்தில் இருக்கிறார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி அன்றைய தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

ஜெயநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று (புதன்கிழமை) துவங்கியது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.

காங்கிரஸ் கட்சி 54,045 வாக்குகள் பெற்று இருந்தது. பா.ஜனதா 50,270 வாக்குகள் பெற்று இருந்தது. இதன்படி, 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி 46 சதவீத வாக்குகளையும் பாரதீய ஜனதா 33.2 சதவீத வாக்குகளையும் பெற்று உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் பலம் 79 ஆக அதிகரித்துள்ளது.

தோல்வி மட்டுமின்றி வாக்கு சதவீதமும் வெகுவாகக் குறைந்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Response