ஐபிஎல் – ஐதராபாத்தை அடித்து நொறுக்கி கோப்பை வென்ற சென்னை

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் இறுதிசுற்றை எட்டின.

இந்த நிலையில் மே 27 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் கோஸ்வாமி 5(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் தவான் 26(25) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த கேப்டன் வில்லியம்சன் 47(36) ரன்கள் எடுத்திருந்த போது சர்மா பந்தில் அவுட் ஆகி, தனது அரை சத வாய்ப்பினை தவற விட்டார்.

அடுத்ததாக ஷகிப் அல்-ஹசனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இதில் ஷகிப் அல்-ஹசன் 23(15) ரன்களில் பிராவோ பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 3(4) ரன்களில் நிகிடி பந்தில் அவுட் ஆனார். அடுத்தாக பிராத்வெய்ட் 21(11) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசியில் யூசுப் பதான் 45(25) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக, தாகூர், நிகிடி, சர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் டு பிளிஸ்சிஸ் 10(11) ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஷேன் வாட்சனுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய வந்த வாட்சன் அரை சதத்தினை பதிவு செய்தார். இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ரெய்னா 32(24) ரன்களில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

மற்றொரு முனையில் வாணவேடிக்கை காட்டி வந்த ஷேன் வாட்சன் 51 பந்துகளை சந்தித்து சதத்தினை பூர்த்தி செய்தார். கடைசியில் ஷேன் வாட்சன் 117(57)ரன்களும், அம்பத்தி ராயுடு16(19) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக, சர்மா, பிராத்வெய்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று “சாம்பியன்” பட்டத்தினை தட்டிச் சென்றது.

விறுவிறுப்பு நிறைந்த இறுத்திப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையை பெறுகிறது. 2 ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கிய சென்னை அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.

Leave a Response