சீமானை கைது செய்யக்கூடாது – நீதிமன்றம் அறிவுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 19-ந்தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக 2 கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் அங்கு வந்திருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் திருச்சி விமான நிலைய காவல்துறையிடம் புகார் செய்தனர். இதில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘திருச்சி விமான நிலையத்தில் 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின்போது அந்தப் பகுதியில் நான் இல்லை. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை சீமானை கைது செய்யக் கூடாது என்று காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Leave a Response