நெடுவாசல் மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ‘ஜெம் லெபாரட்டரி’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி, மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆனால், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) வழங்கப்பட்டிருந்த குத்தகையை ஜெம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மாற்றித் தரவில்லை.

மேலும் திட்டத்தை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஜெம் நிறுவனம் தயாராகியுள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு 2 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியிருக்கும் ஜெம் நிறுவன முதுநிலை அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான ஹரிபிரசாத் கூறும்போது,

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கத் தாமதமாவதால் எங்களுக்கு இழப்பு அதிகமாகி வருகிறது. நாங்கள் இலாபத்துக்காகத் தொழில் செய்யும் வியாபாரிகள். நெடுவாசலில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே, நெடுவாசல் திட்டத்தைக் கைவிடத் தயாராகவுள்ளோம். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மாற்று இடம் வழங்கக் கோரி மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

நெடுவாசல் குத்தகையை தமக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசுக்கு ஜெம் நிறுவனம் சார்பில் இதுவரை 10 கடிதங்களும் மத்திய அரசு சார்பில் 3 கடிதங்களும் அனுப்பப்பட்டன. எனினும், தமிழக அரசு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, கடந்த செப்டம்பர் 2015-ல் மத்திய கேபினேட் அமைச்சகம் கூடி முடிவு எடுத்தது. இந்தத் திட்டம் நெடுவாசலில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நெடுவாசல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டம் அறிவித்த மறுநாளே, நெடுவாசல் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டம் 22 நாட்கள் நடைபெற்றது. அதன் பின்னர், இந்தத் திட்டம் கைவிடப்படும் என தமிழக அரசு அளித்த உறுதிமொழியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவிலான 28 நிறுவனங்களிடம் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், மீண்டும் நெடுவாசலில் பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் 172 நாட்கள் நடைபெற்றது. மேலும், இத்திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியுடன் இப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இப்போது ஜெம் நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது நெடுவாசல் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

Leave a Response