எருமை மாடு போல சென்று விட்டாரே – மோடியை வெளுத்த பாரதிராஜா

ஏப்ரல் 20 ஆம் நாள் (20.4.2018) சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சென்னை புத்தகச் சங்கமம் – உலகப் புத்தக நாள் பெருவிழாவினை தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இனம் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் கருத்த மனிதர்களே!

என் இனிய தமிழ் மக்களே!

வரியியல் வல்லுநர் வயதில் எனக்கு மூத்தவரோ இளைஞரோ தெரியவில்லை. நான் வயதை மறைத்துக் கொண்டிருக்கிறேன். மரியாதைக்குரிய ராசரத்தினம் அவர்களே,

கருப்புச் சட்டையில் இனம் காக்கப் போராடிக் கொண் டிருக்கும் கருத்த மனிதர்களே!

ஆச்சரியப்படுகிறேன், மகிழ்கிறேன், நெகிழ்கிறேன்!

இந்தக் கருத்த மனிதனையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று போராடிய வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் – அவர் சுவாதித்த காற்றும், அவர் வாழ்ந்த இந்த சுற்றுப்புற சூழலில் பாரதிராஜா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிறபொழுது, நான் எந்த அளவிற்குத் தகுதியானவன் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த மண்ணையும், மக்களையும், இந்த இனத் தையும், மொழியையும் நேசித்த ஒரு காரணத்திற்காகவோ, அந்த ஒரு தகுதியைக் கருதியோ, என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்து, இந்த சுவாசத்தை நுகர வைத்திருக்கிறீர்களோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன், மகிழ்கிறேன், நெகிழ்கிறேன்!

என்னுடைய தகுதி என்று சொன்னால், மேடைகளில் நான் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். அதிகமாகப் படிக்கவில்லை என்றாலும், நான் போராடுகிறேன்? நீங்கள் நூல் படித்தவர்கள்; ஆழமாக நுண்மான் நுழைபுலம் பெற்றவர்கள், கவிதையாக இருக்கட்டும், கட்டுரையாக இருக்கட்டும் – எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது.

ஒன்றே ஒன்று, எங்க ஆத்தாளை தெரியும்; எங்க ஆத்தா சொன்ன கதை தெரியும்; எங்க அக்கா சொன்ன கதை, பக்கத்து வீட்டுக்காரன் சொன்ன கதை, கடலைக் காட்டில் அமர்ந்து கதை கதையாகக் கேட்டது – பார்த்த சினிமா – இந்தக் கலவையில் வந்தவன் பாரதிராஜா.

தமிழினத்தின் அடையாளம் ஒன்று மட்டும் போதும்

ஆகவேதான், இந்த மண், இந்த மொழி, இந்த இனம் என்னை அடையாளப்படுத்திக் காட்டியது. ஆகையினால், சாகும்வரைக்கும் எனக்கு எந்த அடையாளமும் இல்லை; தமிழினத்தின் அடையாளம் ஒன்று மட்டும் போதும்.

எனக்கு வயதாகிவிட்டதோ என்று இங்கே ராசரத்தினம் அவர்கள் பேசினார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் நான் அதைப்பற்றி யோசிக்கிறேன். இன்றைக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படம் எடுத்து திரும்பியிருக்கிறேன். மைனஸ் 5 டிகிரி செல்சியசில் இமாச்சலப் பிரதேசத்தில் சூட்டிங் எடுத்திருக்கிறேன். ஆகையினால், எனக்கு வயது இல்லை. என் வயது என் மக்கள். நீங்கள் எல்லாம் எவ்வளவுக் கெவ்வளவு இந்த பாரதிராஜாவை உங்கள் குழந்தைபோல், தொட்டிலில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களே, எனக்குத் தகுதி இருக்கிறதோ, இல்லையோ, எதுவரையில் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களோ அதுவரையில் நான் இளைஞன்தான், அதில் ஒன்றும் மாற்றமே கிடையாது.

திராவிடர் கழகத்தைப்பற்றியும், பெரியாரைப்பற்றியும்…

நான் சிறிய வயதில், பெரியாருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா காவல்துறையில் பணியாற்றியவர். காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவர். கருப்புச் சட்டைக்காரர்களின் கூட்டத்திற்குப் போகாதே என்பார். கருப்புச் சட்டைக்கு ஒரு கூட்டமா? என்று நினைத்தேன். ஏனென்றால், 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனான எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை. என் னுடைய தமிழாசிரியர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்தான், முதன்முறையாக, தமிழைப் பற்றியும், திராவிடர் கழகத் தைப்பற்றியும், பெரியாரைப்பற்றியும் எனக்கு சொன்னார்.

தமிழாசிரியர்கள் மட்டும்தான் இந்தக் கொள்கையில் தாக்கத்தோடு இருப்பார்கள்; மற்ற பாடங்களுக்கு அவாள், இவாள் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்தக் கொள்கையைப்பற்றியே பேசமாட்டார்கள்.

தமிழாசிரியர்கள் மட்டும்தான், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி இந்தக் கொள்கையின் தாக்கத்தோடு இருப்பவர்கள். அந்தத் தமிழாசிரியர்தான் என்னை முதன்முதலில் நடிகனாக்கினார்.

அன்றைய காலகட்டத்தில் ஏழு நாடகங்கள்; அந்தப் பள்ளியில் மூன்று பேர் வெள்ளை வாத்தியார்; பூடகமாகத் தான் சொல்ல முடியும். அந்த வெள்ளை வாத்தியார்கள் மூன்று பேர் நாடகம் போடுகிறார்கள். தமிழாசிரியர் ராமலிங்கம் அவர்கள் கருப்பு; அவர் எழுதிய நாடகத்திற்காக என்னை அழைத்து, இதில் நீ நடிக்கிறாய் என்று சொன்னார். வெள்ளை வாத்தியார்களின் மூன்று நாடகம்; கருப்பு வாத்தியாரின் ஒரு நாடகம். மீதி இரண்டு நாட்டிய நாடகம்.

மூன்று வெள்ளையர்களின் நாடகத்தை அடிக்கவேண் டும் என்பது கருப்பு வாத்தியாரின் எண்ணம். அந்த ஆண்டு ஏழு நாடகங்களிலும் சிறந்த நாடகம், சிறந்த நடிகன், சிறந்த இயக்குநர் என்று பெயரை வாங்கிக் கொடுத்த ஆசிரியர் அவர்.

அதனால்தான் மொழி என்றாலும் சரி, இனம் என்றாலும் சரி, இந்த மண் சார்ந்து நான் வாழ்ந்துவிட்டேன்.

பெரியார் அவர்களைப்போலவோ, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைப் போலவோ நான் ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்ய முடியாது. முட்டாள்தனமாக, முரட்டுத்தனமாக, பிடிவாதமாக இனம், மொழி என்பேன்.

நான் குடித்தது தாய்ப்பால். என் தாயை நான் எப்படி மறுக்க முடியும்? அதுபோலத்தான், இலக்கணம் தெரி கிறதோ இல்லையோ, என் தாயைப் புரிந்து கொள்வதற்கு, எனக்கு இலக்கணம் தேவையில்லை. என் மொழி, என் இனம் அதில் நான் அழுத்தமாக இருக்கிறேன்.

அந்தக் காலகட்டத்தில் நிறைய புத்தகங்களைப் படிப்பேன். நான், அகிலன், பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கல்கி புத்தகங்களின் வாசிப்பு வெறியன். ஒரு காலகட் டத்திற்குப் பின்னால், சினிமாவில் எப்பொழுது நுழைந் தேனோ, அந்த வாசிப்பு குறைந்துவிட்டது.

மறுபடியும் என்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், எஞ்சிய காலத்தில் நீ தோற்றுவிடுவாய் என்று என் உள் உணர்வு எனக்கு சொல்லியது.

இன்றைக்கும் சொல்வேன், இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்வதற்கு, 200, 300 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டியது இருக் கிறது.

சிறிய பொறிதான் முதல் மரியாதை

புத்தகம் படிப்பது என்பது படம் பார்த்து கதை சொல்வதுபோன்று கிடையாது. மூளைக்கும், அழுத்தமான உணர்வு செயல்படவேண்டுமென்றால், புத்தகங்களைப் படிக்கவேண்டும்.ஜெயகாந்தனுடைய புத்தகங்கள் ஒவ் வொன்றையும் நான் படித்திருக்கிறேன். சமூகம் என்பது நாலு பேர்” என்கிற தலைப்பில் எழுதிய அவருக்கே ஞாபகம் இருக்காது. அந்தக் கதாபாத்திரங்களின் பின் புலங்களை எல்லாம் நான் சொல்வேன். அதைப் படமாக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையும்கூட, அதனுடைய சிறிய பொறிதான் முதல் மரியாதை.

முதல் மரியாதை என்பது, சமூகம் என்பது நாலு பேரினுடைய சிறிய சாரல் ஆகும்.

இன்றைக்கு மக்கள் மத்தியில் வாசிப்பது என்பது குறைந்து போய்விட்டது. என்றைக்கு தொலைக்காட்சி வந்ததோ, அன்றிலிருந்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சோம்பேறியாக்கி விட்டது. கண்ணுக்கு விருந்தாக இருக்கிறதே தவிர, மூளையை சோம்பேறியாக்கி விட்டது. ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு, சினிமா பாதிக்கவே பாதிக்காது!

வாசித்தால், மூளை பக்குவப்படும்; அது ஒரு புதிய களத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்க்கும். ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு, சினிமா பாதிக்கவே பாதிக்காது. அப்படியெல்லாம் இருந்த பாரதிராஜா, இன்றைக்கு மறுபடியும் அதை நோக்கிச் செல்கிறேன்.

துரு பிடித்த மூளையை மறுபடியும் உரசி மெருகேற்ற விருக்கிறேன். ஆக, வாசிப்பு என்பது இன்றைக்குக் குறைந்துவிட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்காக சென்னை புத்தக சங்கமத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள். அதுவும் கட்டணம் இல்லாமல் உள்ளே நுழைய அனு மதித்திருக்கிறீர்கள். பெரியார் இருந்திருந்தால், இப்படி அனுமதித்திருக்கமாட்டார். ஏனென்றால், அறிவைத் தேடி வருகிறவர்கள் காசு கொடுத்துவிட்டு வரட்டும் என்பார். ஒரு கையெழுத்திற்கே காசு கேட்டவர் தந்தை பெரியார். ஏனென்றால், அதனுடைய மதிப்பு அவனுக்குத் தெரிய வேண்டும் என்பார்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார்

பெரியாரைப்பற்றி வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் சொல்லி உலகம் முழுவதும் பரப்பி விட்டான். தமிழ் நாட்டைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இந்தத் தகுதி இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், ஏன் இன்னும் அவர்கள் பயப்படுகிறார்கள்? மெல்ல காற்றுப் பிடிக்கிறான்; மெல்ல மூச்சு வாங்குகிறது. இப்பொழுதே மூச்சைப் பிடித்து நிறுத்திவிடவேண்டும். தெரியாமலா சொன்னார் பெரியார் அவர்கள்.

இவனை மூச்சு வாங்கவிட்டால் பின்னாளில் விஷமாகிவிடும் என்றார். நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள்!

நாங்கள் எல்லாம் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் எல்லாம் வந்தேறிகள். நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள். நீ யார் பெரியாரைப்பற்றி பேச?

ஒரு கேவலமான, அனாச்சாரமான செயல் – பாலியல் வன்கொடுமைகள் இன்றைக்கு நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. எதற்காக இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன் என்றால், இப்பொழுது இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமென்றால், எதிர்கால சந்ததியினருக்கு, இந்த மண் அபகரிக்கப்படுகிறது, மொழி அபகரிக்கப்படுகிறது, பண்பாடு அபகரிக்கப்படுகிறது – அபகரித்தாலும் பரவாயில்லை, மறுபடியும் நாங்கள் பிடுங்கிக் கொண்டு வந்துவிடுவோம். ஆனால், அதை அழிக்கிறார்கள்.

வேதம் புதிது’ கதையை எழுதியவர் ஒரு பூணூலுக்குச் சொந்தக்காரர்

வேதம் புதிது’ திரைப்படத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள். நான் ஒரு உண்மையை சொல்கிறேன், அந்த வேதம் புதிது’ கதையை எழுதியவர் ஒரு பூணூலுக் குச் சொந்தக்காரர். ஒரு ஏழு சீனாக இருந்ததை, 70 சீனாக ஆக்கினேன் நான். அவர் இன்றைக்கு அமெரிக்காவிற்குச் சென்று செட்டிலாகிவிட்டார். இந்த நாட்டில் அவனை வாழ விடவில்லை, அந்த சமுதாயம். அவன் வேலை பார்க்கும் இடத்தில், பணியாற்றவிடாமல், அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்கள். அதை மீறி அவன் முளைத்தான். அப்படியிருக்கும் சமுதாயத்தில் இப்படி ஒருவனா? என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார், நீங்கள் அதிகம் போராடவேண்டும் போலிருக்கிறதே” என்றார்.

மத்திய சர்க்கார் காஞ்சிபுரத்தில் இருக்கிறதா? சாஸ்திரி பவனில் இருக்கிறதா?

தணிக்கை அதிகாரியாக இருந்த ஒருவர் அன்றைக்கு என்ன சொன்னார் என்றால், நீங்கள் காஞ்சிபுரம் வரை சென்று ஒரு கடிதம் வாங்கி வாருங்கள்” என்றார்.

காஞ்சிபுரத்திற்குச் சென்று நான் என்ன கடிதம் வாங்கி வரவேண்டும்? என்றேன்.

நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட்” வாங்கி வரவேண்டும் என்றார் அந்தத் தணிக்கை அதிகாரி.

ஏண்டா, மத்திய சர்க்கார் காஞ்சிபுரத்தில் இருக்கிறதா? சாஸ்திரி பவனில் இருக்கிறதா?

எம்.ஜி.ஆர். அவர்கள் வேறு போராடுகிறார்; அமைச் சராக இருந்த ராஜாராம் அவர்களை டில்லிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்கள் மசிவது போன்று தெரியவில்லை.

நான் பாரதிராஜா, ஒரு காட்டான்; ஏதோ சினிமா இயக்குநர் என்று தெரியாமல் சொல்லி வைத்துவிட்டார்கள். வேதம் புதிது நெகட்டிவைக் கொண்டு வந்து சாஸ்திரி பவன் முன் வைத்து தீ வைத்து கொளுத்துவேன். தமிழ்நாடு முழுவதும் அந்தத் தீ பரவும். அழிந்து போய்விடுவீர்கள்” என்றேன்.

அதற்குப் பிறகு 24 மணிநேரத்திற்குப் பிறகு அந்தத் திரைப்படத்திற்கு சான்றிதழ் அளித்தார்கள்.

வேதம் புதிது’ படத்தைப் பார்த்த வீரமணி அய்யா!

அதன் பிறகு வீரமணி அய்யா அவர்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, என்னை கவுரவித்தார்.

என்னுடைய உணர்ச்சியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை, பாரதிராஜா. இன்றைக்குப் பெரியார் இல்லை” என்றார் வீரமணி அய்யா.

இதேபோன்று, அலைகள் ஓய்வதில்லை படத்தில், பூணூலையும், சிலுவையையும் அறுத்து எரிகின்ற காட்சியை வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார், அண்ணாவும், பெரியாரும் இல்லையே!” என்று.

விஷச் செடிக்கு மறுபடியும் உரமூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது

இன்றைக்கு நீங்கள் விடுவீர்களா? அன்றைக்கு அவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் அல்லவா! ஆக, இன்றைக்கு நீங்கள் எழுந்திருக்கிறீர்கள் என்றால், விஷச் செடிக்கு மறுபடியும் உரமூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எனக்குக் கோபம். விஷச் செடியைப் பிடுங்கி எறிந்துவிட்டோம் அல்லவா! எப்படி கொல்லைப் புறத்தின் வழியாக கீரை போன்று வருகிறீர்கள். இது கீரை அல்ல, நச்சுச் செடி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அண்ணாவும், பெரியாரும் இல்லையே என்று சொல்லி எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டிப் பிடித்துச் சொன்னபொழுது,

நீங்கள்தான் அண்ணாவையும், பெரியாரையும் உள்ளே வைத்திருக்கிறீர்கள் அல்லவா; நீங்கள் பாராட்டினாலே போதும் என்று அன்றைக்கு நான் சொன்னேன்.

ஆக, இன்றைக்கு நான் சொல்ல முடியாது – ஒரு பிராமணச் சிறுவனை வைத்து, மூச்சுக்கு முன்னூறு முறை பாலுத் தேவர் பரம்பரை, பாலுத் தேவர் பரம்பரை என்று சொல்கிறீர்களே, பாலு என்பது உங்கள் பெயர்; தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்பதுபோன்று ஒரு காட்சி. அதற்கு மேலும் ஒரு சிறுவன் கையால், மூன்று முறை அவருடைய செவுளில் அறைவது போன்று ஒரு காட்சியை வைத்தேன். கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால், நாடு, சுடுகாடுதான்!

ஏண்டா, எவ்வளவு பெருந்தன்மையாக நாங்கள் செய்தோம். அன்றைக்கு ஏதாவது ஒரு குழப்பம் இருந்ததா? இன்றைக்கு ஆண்டாள் சர்ச்சையைக் கொண்டு வருகிறீர்களே, உங்களுக்கு எவ்வளவு இது’ இருக்கவேண்டும். ஆக, நாகரிகம் உள்ளவர்கள் நாங்கள், எவ்வளவு அமைதியாக இருந்தார்கள். நினைத்திருந்தால், எங்களுடைய கூட்டமே என்னை அழித்திருக்கலாம். எவ்வளவு நாகரிகமாக இருந்தார்கள். கருத்து மாற்றங்கள், கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால், நாடு கிடையாது. சுடுகாடுதான்.

புத்தகம் படிக்காத பாரதிராஜா, புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறேன். இதற்குத் தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்வேன்.

இந்த மண் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்தவர் தந்தை பெரியார். எவ்வளவு துணிச்சல் இருந்தால் அவரைப்பற்றி இணைய தளத்தில் செய்தி வெளியிடுவாய் நீ; ஒருமையில் அழைக்கிறாய். தூண்டி விடுகிறாய்.

இதை எதிர்த்துக் கேட்டவுடன், அட்மின் போட்டு விட்டார், எனக்குத் தெரியாது என்கிறாய்.

உன்னை அல்லவா குண்டர் சட்டத்தில் போடவேண்டும்!

குண்டர் சட்டத்தில் என்னை போடவேண்டுமாம்! யாரை குண்டர் சட்டத்தில் போடவேண்டும்?

நாக்கை அறு, அதை அறு, இதை அறு என்று சொல்கின்ற உன்னை அல்லவா குண்டர் சட்டத்தில் போட வேண்டும்!

பெண் செய்தியாளர்களைப்பற்றி கேவலமாகப் பேசு கிறான் ஒருவன், என் வீட்டில் வளர்க்கின்ற செல்ல நாய்க் குட்டியைக்கூட நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன். இந்தத் தெருப் பொறுக்கி நாயை எல்லாம் நான் பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. வீட்டு நாய் என்பது விசுவாசமானது, அதைப் பெயர் சொல்லி அழைப்பது தவறில்லை. ஆனால், தெருவிலுள்ள நாயைப் பெயர் சொல்லி அழைக்க முடியுமா? அவர்களையெல்லாம் வேரறுத்துவிடவேண்டும்.

பீகாரில் பிறந்த ஒரு பரதேசி, தமிழ் மண்ணில் வந்து இப்படி பேசுகிறாய்?

பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்பவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருக்கவேண்டாமா? அவனை நாடு கடத்தவேண்டும். அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்திற்காவது அவனை கடத்தியிருக்கவேண்டும். தமிழ் மண்ணை விட்டுப் போகவேண்டும். அவனுடைய மூச்சுக்காற்று கூட இங்கே இருக்கக்கூடாது. ஏண்டா, பீகாரில் பிறந்த ஒரு பரதேசி, தமிழ் மண்ணில் வந்து இப்படி பேசுகிறாய்? அருகிலுள்ள மாநிலத்திற்குச் சென்று எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தண்ணீர் தருவதில்கூட அரசியல் செய்கிறீர்கள்.

என்ன தெனாவட்டு இருந்தால், தமிழ்நாடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர், இங்கே வந்து அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், சூடு சொரணையற்று, எருமை மாடு போல் சென்றுவிட்டாரே! விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம்; வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம்!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்லி யிருக்கவேண்டும், ஏன் இந்த குழப்பம் ஏற்படுகிறது, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

விழித்துக் கொள்ளுங்கள்! வீரம் வேண்டும்; கூடவே விவேகமும் வேண்டும்.

விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம்; வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம், மொழியைக் காப்போம்; இந்த இனத்தைக் காப்போம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உரையாற்றினார்.

நன்றி – விடுதலை

Leave a Response