சச்சின் தெண்டுல்கர், ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லாக்காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார்.
இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார்.
சர்வதேசப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார்.
தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே.
மேலும் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.
இவருடைய 46 ஆவது பிறந்தநாள் இன்று.
அதையொட்டி எழுத்தாளர் சரவணன் எழுதியுள்ள குறிப்பு….
சச்சின் டெண்டுல்கரை ஒரு விஷயத்தில் ரெம்பவும் பிடிக்கும். எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் அவர் இருநூறு அடித்த மேட்ச்சை திரும்பத் திரும்பப் பார்ப்பேன். உலகமே அப்படிப் பார்க்கும் போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
அவர் பல்வேறு சர்ச்சைகளைக் கடக்கும் போதெல்லாம் கவனித்துப் பார்த்திருக்கிறேன். அமைதியாக இருப்பார். டக் அவுட் ஆகும் போது கரித்துக் கொட்டுவார்கள். செஞ்சுரி அடிக்கும் போது லட்டு மாலையெல்லாம் போடுவார்கள். அப்போதும் கீச்சுக் குரலில் ஐ ஆம் ப்ளையிங் குட் கிரிக்கெட் என்பார். கீச்சுக் குரலோடு பொதுத் தளத்திலும் எப்படி அமைதியாக குட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதைச் சொல்லித் தந்த ஆசான். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நாளில் ஒருதடவையாவது அவரை நினைத்துக் கொள்வேன்.
என் குமார் கோச்சைகூட அப்படித்தான் நினைத்துக் கொள்வேன். சச்சினும் அவரது குருவை அப்படித்தான் நினைத்துக் கொள்வார். எங்கள் காலகட்டத்தைப் பொறுத்தவரை எங்களுக்கெல்லாம் குரு அவர். பார்பியில் ஒருவசனம் எழுதும் போது அவரைத்தான் அடியாழத்தில் நினைத்துக் கொண்டேன்.
“விளையாடத்தான் வந்திருக்கிறாய். சிவப்பு அட்டை வாங்கி வெளியேறுவதற்கு அல்ல” பார்பி.
சிவப்பு அட்டையே வாங்காத குருவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.