பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (24) என்ற பொம்மை வியாபாரி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தீக்குளித்தார். இதையடுத்து, அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது வீட்டு சுற்றுச்சுவரில் மத்திய அரசு, கர்நாடக அரசுகளை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
தர்மலிங்கம் மோடியை எதிர்த்து தீக்குளித்த செய்தி அறிந்ததும் நாம்தமிழர்கட்சி, திமுக,மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களும் மருத்துவமனையில் திரண்டனர்.
மருத்துவமனை சடங்குகள் முடிந்ததும் அனைத்துக்கட்சியினரும் முன்னின்று இறுதி ஊர்வலம் நடத்தினர்.
அதன்பின் நடந்த இரங்கல் கூட்டத்தில், பாமக தலைவர் கோ.க.மணி,மதிமுக மாவட்டச் செயலர் அ.கணேசமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் விநாயகமூர்த்தி,சிறுத்தை வள்ளுவன்,தமிழ்த்தேசியப் பேரியக்கம் அருள்ஒளி, குமரேசன், நாம்தமிழர் அ.தமிழ்ச்செல்வன்,லோகுபிரகாசு, பெரியசாமி (காந்தி ம.இயக்கம் )கண.குறிஞ்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.