எச்.ராஜாவின் செயல் காட்டுமிராண்டித்தனம் – ரஜினிகாந்த் கண்டனம்

திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோல்வியடைந்தது. அங்கு வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியினர் வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வீடுகள், அலுவலகங்களைத் தாக்கினர்.அதன் தொடர்ச்சியாக, தெற்கு திரிபுரா மாவட்டத்தில் பெலோனியா என்ற நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்,புரட்சியாளர் லெனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையை பாஜகவினர் இடித்துத்தள்ளினர். இதனால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழ்நாட்டில் ஈ.வே.ரா.சிலை என குறிப்பிட்டிருந்தார்.

எச்.ராசாவின் இந்த பதிவிற்க்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று (மார்ச் 8,2018) போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் எச்.ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்த வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Response