பூணூல் அறுப்பு வழக்கில் 4 பேர் சரண்

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. இதை அடுத்து திரிபுராவில் பாஜக வன்முறையில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இதை குறிப்பிட்டு தன் முகநூலில் எச்.ராஜா நேற்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும் என்று பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பிராமணர் சங்கத்தினர் எச்.ராஜாவின் பதிவைக் கண்டித்தனர்.

இந்நிலையில் இன்று காலை மைலாப்பூர் நல்லத்தம்பி தெருவில் சென்றுகொண்டிருந்த பிராமணர்கள் சிலரின் பூணூலை துள்ளுந்தில் வந்த சிலர் அறுத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது நான்கு துள்ளுந்துகளில் 8 பேர் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் பெரியார் திராவிட கழக அமைப்பினரில் பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ஆகிய நான்கு பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் வினோத் முன்பு, பூணூல் அறுக்கப்பட்ட வழக்கில் சரணடைந்தனர்.

Leave a Response