எம்ஜிஆர் சிலை திறக்க ரஜினிக்கு தகுதி இருக்கிறதா?

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:

என் நண்பரான ஏ.சி.சண்முகத்தை 30 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எதிர்பாராதவிதமாக மோகன்பாபு உடனும் எனக்கு நட்பு ஏற்பட்டது. அது தொடர்ந்து 1996-ம் ஆண்டு நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சூழ்நிலை நிலவியவேளையில், நான் அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும் என்று என்னை வற்புறுத்திய ஒரு சில நபர்களில் என் நண்பர் ஏ.சி.சண்முகமும் ஒருவர். அவர் என்மீது கொண்ட அன்பு அளவு கடந்தது. நல்ல நிகழ்ச்சிகளின்போது எங்கள் வீட்டில் இருந்து அவர் வீட்டுக்கு செல்வதும், பதிலுக்கு அவர் வீட்டில் இருந்து என் வீட்டுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சட்டம் பயின்று, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அ.தி.மு.க.வின் உறுப்பினராக இருந்து, அவரது ஆசியுடன் எம்.எல்.ஏ.. எம்.பி. ஆகி, எம்.ஜி.ஆரின் விருப்பப்படி கல்வி நிறுவனம் தொடங்கி மிக திறமையாக சுயநலமின்றி நல்ல கல்வியை கொடுத்து புகழ் பெற்றபிறகு, அந்த மையம் வளர்ந்து தற்போது 30 கிளைகள் தொடங்கி இருக்கிறார் என்றால் எம்.ஜி.ஆரின் வித்தைக்கு கொடுத்த மதிப்பு மற்றும் சேவை. 30 ஆயிரம் மாணவர்கள் படிப்பதும், 10 ஆயிரம் பணியாளர்கள் அவரிடம் வேலை பார்க்கிறார்கள் என்றால் அவரது சாதனை எப்படி பட்டது? அது தொடரவேண்டும். ஆண்டவன் அருள் அவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் சிலையை நான் தான் திறக்கவேண்டும் என்று 1996-ம் ஆண்டில் இருந்தே எனக்கு வேண்டுகோள் விடுத்து வந்தவர் ஏ.சி.சண்முகம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும் ஏ.சி.சண்முகம் பிடிவாதமாக இருந்து வந்தார். எத்தனையோ தலைவர்கள் இருக்கும்போது எம்.ஜி.ஆர் சிலையை நான் திறக்கலாமா? அதற்கான தகுதிகள் என்னிடம் இருக்கிறதா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது.

நான் இவ்வளவு பிடிவாதம் ஏன்? என்று அவரிடம் கேட்டபோது, ‘அண்ணே… எம்.ஜி.ஆர். சினிமா பின்னணியில் இருந்து வந்தவர். அவரது சிலையை சினிமா பின்னணி கொண்ட நீங்கள் திறப்பது தான் சரியாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் தான் அதை செய்ய வேண்டும்’ என்றார். அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

இப்போது நடைபெறுவது அவருடைய நூற்றாண்டு விழா. எனக்கு அவரிடம் 2 நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதனை எங்கும் நான் சொன்னது இல்லை.

எம்.ஜி.ஆரை நான் முதல் முதலாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போது, 1973-ல் வகுப்பு முடிந்து தொலைபேசி பேசுவதற்காக வெளியே வந்த போது பார்த்தேன். ஒரு பாட்டி துடைத்துக்கொண்டிருந்தார். துடைப்பத்தை போட்டுவிட்டு, வந்த காரை நோக்கி ஓடினார். காரில் இருந்து கண்ணாடி இறங்குகிறது, அங்கு தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டு மஞ்சள் கலந்த ஆப்பிள் கலரில் சூரியன் மாதிரி ஜொலிச்சிக்கிட்டு, ஒரு முகம் தெரிந்தது. அவருக்கு போய் சந்திரன் என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

முதல் முறையாக அப்போதுததான் நான் பார்த்தேன். அதுக்கு பிறகு 1975-ல் ‘மூன்று முடிச்சு’ படத்துக்காக வாகினி ஸ்டூடியோவில் செட் போட்டிருந்தார்கள். படப்பிடிப்பு நடந்தபோது எல்லோருமே ஒரு நாள் அலெர்ட்டாக இருந்தார்கள். எல்லாம் சுத்தமாக இருந்தது. ஒவ்வொருவரும் அங்கும், இங்குமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் சின்னவர் படப்பிடிப்பு, எம்.ஜி.ஆர். சார் சூட்டிங் என்று சொன்னார்கள்.

சினிமாவில் இருக்கும்போதே அவர் ராஜா போல இருந்தார். அரசியலில் மட்டும் அவர் ராஜா இல்லை. தென் இந்தியாவில் வீட்டில் நீச்சல் குளம், கேரவன், உடற்பயிற்சி நிலையம், புரொடக்‌ஷன் குரூப், டேன்ஸ் குரூப், உதவி இயக்குனர்கள் குரூப் வைத்துக்கொண்டு அங்கிருந்து ஏழை-எளியவர்களுக்கு ரூ.300, ரூ.400 என பல ஆயிரக்கணக்கில் மாதா மாதம் பணம் போகும். எம்.ஜி.ஆருக்கென்று சபாபதி உள்பட சில தலைவர்களை வைத்திருந்தார். அவருக்கு பணம் கொடுத்தே சிவந்த கை. நான் உள்பட எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.

1978-ம் ஆண்டு எனக்கு உடம்பு சரியில்லை. விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வாரத்துக்கு ஒரு நேரம், 2 நேரம் எம்.ஜி.ஆர். போன் செய்து உடல்நலம் விசாரிப்பார். 2 மாதம் கழித்து, உடல்நலம் குணமடைந்த பின்னரும் என்னை வெளியே விடாமல் அப்படியே வைத்திருந்தார்கள். ஏனென்றால் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வருகிறது, வீடு திரும்பும்போது அவரிடம் இருந்து பேசிவிட்டுதான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார் என்று. அதுக்கு பின்னர் போனில் என்னிடம் பேசினார். எப்படி இருக்கிறீர்கள்? நல்லா இருக்கிறீர்களா? நான் டெல்லிக்கு சென்றுகொண்டிருக்கிறேன். போயிட்டு வந்ததும், நீங்கள் வந்து என்னை பாருங்கள் என்று சொன்னார்.

2 நாட்கள் கழித்து, தியாகராயநகரில் அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, ‘தம்பி நடிகனுக்கு உடம்பு தான் மூலதனம். அந்த உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடாது, அதுக்கென்று ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.

கல்யாணம் எப்போது? என்று கேட்டார். ‘நான் இன்னும் பெண் பார்க்கவில்லை’ என்று கூறினேன். முதலில் நல்ல ஒரு குடும்ப பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார். பெண் பார்த்தால் முதலில் என்னிடம் தான் சொல்லவேண்டும், நான் கல்யாணத்துக்கு வருவேன் என்று சொன்னார்.

அதுக்கு பிறகு என்னுடைய மனைவியை பார்த்து 3 மாதத்தில் என்னுடைய அண்ணனிடம் கூட சொல்லவில்லை. இந்த மாதிரி பெண் பார்த்திருக்கிறேன் என்று எம்.ஜி.ஆரிடம் மட்டுமே சொன்னேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். சீக்கிரமாக கல்யாணம் செய்துகொள்ளுங்கள், நான் வருகிறேன் என்று கூறினார். அதுக்கு பிறகு 5 மாதம் ஆகியது, என்னுடைய மனைவி வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது பிரச்சினை செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை கருத்தில் கொண்டு அப்படி செய்தார்கள்.

6 மாதம் கழித்து எம்.ஜி.ஆர். என்னிடம் கல்யாணம் என்ன ஆகிவிட்டது? என்று கேட்டார். ‘இல்ல சார் அவருடைய வீட்டில் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஒத்துக்கொண்டே இருக்கிறார்கள்’ என்று கூறினேன். நான் எம்.ஜி.ஆரிடம் கூறிய 2-வது நாளே அவருடைய வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். எப்படி ஒத்துக்கொண்டார்கள் என்று சொன்னால், ஒய்.ஜி.பி. உறவினர் தான் என்னுடைய மனைவி லதா. எம்.ஜி.ஆர். சார் ஒய்.ஜி.பி.க்கு போன் செய்து, ஏன் தயங்குகிறீர்கள்? நல்ல பையன், கொஞ்சம் கோபக்காரன், உங்க பொண்ணை கொடுங்கள் நன்றாக வைத்திருப்பான் என்று சொல்லியிருக்கிறார்.

இதில் ஊடகங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஒய்.ஜி.பி. மனைவி இருக்கிறார், அவரிடம் கேட்டு நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். தான். 1984-ம் ஆண்டு ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருந்தபோது, விதிமுறை மீறல் இல்லாததால் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முதல் தளம் வேலை நடந்தபோது, திடீரென்று ஒப்புதல் கொடுக்காமல் பணியை நிறுத்திவிட்டார்கள். ஒரு நபர் வந்து, அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, சில விதிமுறை மீறல் இருக்கிறது என்று கூறி, கட்டுமான பணி தொடர்பான கோப்பை மேலே செல்ல விடாமல் தடுக்கின்றனர். என்னுடைய ஆட்களை என்னவென்று பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை. அதன் பின்னர் நானே சென்றேன். எனக்கும் சந்திப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. 6 மாதம் 7 மாதம் ஆகியது, மழைக்காலம் வந்துகொண்டிருக்கிறது, அதற்கு பின்னர் எனது நண்பர்கள் இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

நீங்கள் முதல்-அமைச்சரை சென்று பார்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு தயக்கம். யாரிடமும் கேட்டு பழக்கமே இல்லை. நியாயமாகவும் இருக்கிறது, அதற்கு பின்னர் வேறு வழியில்லாமல் அப்போது நான் மும்பையில் இருந்தேன், நான் போன் செய்து முதல்-அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டேன். மறுநாளே எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துவிட்டார்கள்.

விமானத்தை பிடித்து, காலையில் வந்து ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினேன். அப்போது என்னை எப்படி இருக்கிறீர்கள்?, என்ன சமாச்சாரம், என்ன பிரச்சினை? என்று கேட்டார். அப்போது அவரிடம் கோடம்பாக்கத்தில் ஒரு மண்டபம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். அதுக்கு வந்து ஒரு நபர் இந்த மாதிரி பிரச்சினை செய்துகொண்டிருக்கிறார் என்று கூறினேன். எல்லாமே சரியாக இருக்கும்போது, என்ன பிரச்சினை? நீங்கள் நாளைக்கு வாங்கள் என்று கூறினார். மும்பையில் இருந்தா வருகிறீர்கள்? எத்தனை நாள் படப்பிடிப்பு? அதற்காக இங்கு விமானத்தை பிடித்து வந்தீர்கள்? நீங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறினார். படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்து நான் போன் செய்தேன். மறுநாள் மாலையிலேயே சந்திக்க நேரம் கொடுத்தார்.

நான் சென்றேன், 6 மாதமாக கேட்டுக்கொண்டிருந்த நபர் அங்கு கை கட்டிக்கொண்டு இருக்கிறார். யார் தெரியுமா? என்று எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர் தெரியும்னே என்று கூறினார். இந்த காலத்தில் நடிகர்கள் பணம் சம்பாதிப்பதே கஷ்டம். ஒரு தம்பி பணம் சம்பாதித்து, அதை காப்பாற்றுவது இன்னும் கஷ்டம். ஒரு நல்ல காரியம் செய்கிறான், அதுக்கு தொல்லை கொடுக்கலாமா? உடனே என்ன இருக்கிறதோ, அதை பார்த்து சரிசெய்யுங்கள், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்கு போன் போடுங்கள் என்று கூறினார்.

உடனே எம்.எம்.டி.ஏ. பாஸ் செய்யுங்கள் என்று கூறினார். 3 நாட்களிலேயே எம்.எம்.டி.ஏ.யில் இருந்து தடையில்லா சான்று வந்தது. ராகவேந்திரா மண்டபத்தை கட்டுவதற்கு காரணமே எம்.ஜி.ஆர். தான். ஊடகங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் திருநாவுக்கரசரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த மாதிரி ஒரு பொன்மன செம்மல் அவருடைய, எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு தெய்வ பிறவி.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Response