காவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,பிப்ரவரி 16,2018 ஆம் தேதி தனது தீர்ப்பை கூறியது.

நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. வழங்குமாறு தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு குறைக்கப்பட்டு இருப்பது, தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசு பிப்ரவரி 22,2018 அன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தது.

இதில், தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 30 அரசியல் கட்சிகளும், 9 அரசியல் அமைப்புகளும், 14 விவசாய சங்கங்களும் கலந்துகொண்டன.

இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாகக் கலந்து கொண்ட அதன் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நேற்று (22/02/18) தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் *கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்* சார்பில் நான் கலந்து கொண்டேன்.

11ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் வயதில் மிக இளையவன் என்ற முறையில் பல விஷயங்களில் இது நிறைவான நிகழ்வாக அமைந்தது.

எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இன்றி நிறைந்த நட்புணர்வோடு அனைத்து தலைவர்களும் உரையாடியது மற்றும் கலந்து கொண்ட அனைத்து அமைப்புகளின் கருத்துக்களையும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொறுமையாகக் கேட்டது என குறிப்பிட்டு கூறலாம்.

*காவிரி நீருக்காக தமிழகம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி ஏறக்குறைய அனைவருமே ஒத்த கருத்தையே எடுத்துரைத்தார்கள் .ஆனால் எனக்கு நம்பிக்கை கொடுத்தது என்னவென்றால் பேசிய பலரும் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தாதது பற்றியும் இனி நீர் மேலாண்மையில் நாம்  என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள்.அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள நீர் மேலாண்மை குறித்த இந்த எண்ணம் நிச்சயமாக வரவேற்கத்தக்கது*.

உழவர்கள் நலனுக்காக பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியும் அரசியல் வேறுபாடுகளை விடுத்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழகத்தின் ஜீவநாடியான காவிரியில் நம் உரிமையை மீட்க இன்று போல என்றும் ஒருங்கிணைந்து செயலபட வேண்டுமென வேண்டுகோள் வைத்தேன்.

இந்தக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர்,மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் இதில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகள் சங்கத் தலைவர்களும் ஒருமித்த குரலில் உழவர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தது நம்பிக்கையளிக்கிறது.

மாண்புமிகு பாரத பிரதமர் தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குச் செவிசாய்த்து காவிரி பிரச்சனையில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response