நான் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழக மீனவரைத் தொடமுடியுமா? – சீமான் சவால்

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருமுருகப் பெருவிழா,திருச்செந்தூரில் பிப்ரவரி 11 ஆம் நாள் இரவு நடந்தது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்ரவரி 11 காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

வாகைகுளம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் தமிழக அரசு ஆட்சியை நடத்துவதே சாதனைதான். இந்த ஆட்சி இவ்வளவு காலம் தாக்குப்பிடித்து செல்வதே வரலாற்றுச் சாதனைதான். அதனால் அதனை கொண்டாடுவார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முடிந்து உள்ளது. தற்போது இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கமல், ரஜினியிடம், தினமும் வேலை செய்யும் எங்களைப்பற்றி யாரும் கேட்பது இல்லை. கமல் 37 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக தற்போதுதான் கூறுகிறார். இதற்கு முன்பு ஏன் சொல்லவில்லை.

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேலை இல்லாதவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பொழுது போகாதவர்கள்தான் அதனை பேசிக் கொண்டு இருக்கிறார்கள். வைரமுத்து வருத்தம் தெரிவித்துவிட்டார். அது கடந்து போய்விட்டது. மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன

தமிழக மீனவர்கள் 840 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இது பாராளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மத்திய அரசு, இலங்கை தனது நட்பு நாடு என்று கூறி போர்க்கப்பல் பரிசு, பயிற்சி அளிப்பார்கள். அனைத்து உதவியும் செய்வார்கள். சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற தவறிவிட்ட அரசுதான் தற்போது உள்ள அரசு. ஒரு 5 ஆண்டு எங்களிடம் தமிழக அரசைக் கொடுங்கள். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தொடுகிறார்களா என்று பார்ப்போம். தொட்டுவிட்டால் மறுநாள் நான் பதவியை விட்டு இறங்கி விடுவேன்.

மேலும் பக்கோடா நன்கு சாப்பிட்டால்தான் டீ வியாபாரம் நன்றாக நடக்கும். அதனால் தான் பிரதமர் அதனைப் பற்றிச் சிந்தித்து இருப்பார். பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அதுதொடர்பான விவாதம் நடக்கிறது. அதனை எப்படி செயல்படுத்த உள்ளோம். மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செய்யப்போகிறோம். அதுகுறித்து பேசவில்லை. அதனை விடுத்து பக்கோடா விற்பனை, டீ விற்பனையை பற்றி கவலைப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response