எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி ஜெயலலிதா படம் திறப்பு

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் அதுபற்றிக் கவலைப்படாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது. முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார்.

இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது. பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவையில் வைக்கப்பட்டு உள்ளன. இது முதல் பெண் தலைவரின் படம்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

இப்படத்திறப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்திருக்கிறது.

Leave a Response