இசைமுரசு நாகூர் அனீபாவுக்கு ஜவாஹிருல்லாவின் நெஞ்சம் நெகிழும் பதிவு.

இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம் இறைவனிடமே திரும்ப செல்வோம்). அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டும் அல்ல தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும் ஒட்டுமொத்த தமிழ் கூறும் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார். அவருடைய முகநூல் பதிவு….

இசையுடனான பாடல் மார்க்க நெறிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அவரது ஆரம்ப கால பாடல்களில் மார்க்க ரீதியான முரண்பாடுகளும் உண்டு. இருப்பினும் ஒரு பன்முகச் சமூகத்தில் இசைமுரசு ஹனிபா அவர்கள் தன் ஆழமான கருத்துடைய பாடல்கள் மூலம் அனைத்து சமுதாய மக்களிடையே இஸ்லாத்தின் கொள்கைகளை, இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் வாழ்வியலை அறிமுகம் செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அவரது மரணம் குறித்து எனது நண்பர் மூத்த செய்தியாளர் டி.என். கோபாலன் தனது முகநூல் கருத்துரையில் குறிப்பிட்டிருப்பதே இதற்கு ஒரு உதாரணம். நம் தமிழ் உலகை அழகுபடுத்தியவர், மேன்மையுறச் செய்தவர் நம் இசை முரசு நாகூர் அனிபா அவர்கள் ! இஸ்லாமியப் பாடல்கள் என்றால் இன்றளவும் ஈடில்லாக் கலைஞர் நம் இசை முரசு அவர்கள்தான்!”ஓடி வருகிறான் உதயசூரியனும்,””எங்கள் திராவிடப் பொன்னாடும்”” அழைக்கின்றார் அண்ணா”வும் திமு கழகத்தைஎப்படி வளர்த்தன என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள்! …… அனீபா அவர்கள் என்றென்றும் நம்மோடு இருப்பார் என்று டி.என்.கோபாலன் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்பத் தமிழ் எங்கள் மொழி இனிய இஸ்லாம் எங்கள் வழி என்ற நெறிமுறையுடன் தமிழ் மொழிக்காக அவர் பாடுபட்டிருப்பது இளைய தலைமுறை அறியாத செய்தியாகும். இது குறித்து திண்ணை தளத்தில்ல எழுத்தாளர் அப்துல் கையூம் விரிவாக குறிப்பிட்டிருப்பதை நான் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்
“கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?
“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.
தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார்.
இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.
“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”
என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.
“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.
“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்குதேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.
1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய
“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”
என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.
கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு
பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.
“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.
இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.
அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.
தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.
“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”
என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.
“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”
என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !
நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.
“தாயிப் நகரத்தின் வீதிகளில் – ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்”
என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.
‘கவிக்கோ’ அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்
“கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்” என்பார்
இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.
“சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே” என்று.
அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ
“எத்தனை தொல்லைகள்,
என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும் இன்னொரு பாடலிலும்
“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”
என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்
“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”
என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக
“தாயிப் நகரத்து வீதியிலே – எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை – என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”
என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.”
இவ்வாறு அப்துல் கையூம் குறிப்பிட்டிருப்பது மிக அருமையான வரலாற்று பதிவு.
ஒரு பக்கம் மார்கக நெறியை பரப்பிய அவர் நாம் பேசும் தாய் மொழி தமிழ் இனம் ஆகியவற்றுக்கும் வலுவான குரல் கொடுத்தார் என்பதே உண்மை.
சில நேரங்களில் சில நிகழ்வுகள் வேதனைகளை தரும் போது அவர் பாடிய
“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”
என்ற வரிகள் ஒரு புத்தாகத்தை தரும்.
சமீபத்தில் இராமநாதபுரம் தொகுதியில் ஒரு கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியை சந்திக்க நேர்ந்த போது
இறைவனிடம் கையேந்துங்கள
அவன் இல்லை என்றுச் சொல்வதில்லை
என்ற வரிகளுடன தான் எங்கள் கோவிலில் காலை இசை தொடங்கும் என்று சொன்னார்.
நாகூர் ஹனிபா என்று அவர் அழைக்கப்பட்டாலும் அவர் பிறந்து வளர்ந்தது அவரது தாயாரின் ஊரான இராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் தான்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து மறுமையில் அவருக்கு உயர்ந்த சுவனத்தை அளிக்க பிரார்த்தனை செய்வோமாக.

Leave a Response