பெங்களூர் போனா கன்னடன் தமிழகம் வந்தா இந்தியனா? – பிரகாஷ்ராஜை வெளுத்த சுரேஷ்காமாட்சி

கர்நாடகத்தில் கன்னடர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சி புரிய அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி எழுதியுள்ள திறந்தமடல்…………..

மதிப்பிற்குரிய பிரகாஷ்ராஜ் அவர்கள் பேசியிருப்பது சரியே! நூறு சதவீதம் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவரின் இன உணர்வு சரியான நேரத்தில் வெளியாகி உள்ளது. இந்த இன உணர்வுதான் வேணும்னு நாங்க சொன்னால் தமிழன்கிற இனவெறியைத் தூண்டிவிடுறாங்கன்னு சொல்றாங்க.

பெங்களூரில் கன்னடர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சி செய்யக்கூடாதுன்னு சொன்ன நீங்க எதற்காக என்ன சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் இந்தியன் என்று சொல்லி நின்னீங்கன்னு எனக்குத் தெரியலை?

எங்களோட வலி உங்களுக்குப் புரியும்ணு நினைக்கிறேன். யார் வேணாலும் வாங்க. நடிங்க. சம்பாதிங்க. வாழுங்க. ஆனால் எங்களை நாங்களே ஆள்வதுதானே சரி! அதைத்தானே நீங்களும் சொல்லியிருக்கீங்க!

தமிழ்நாடுன்னு வந்துட்டா நான் இந்தியன்னு சொல்லிக்கிற எல்லோருமே அவங்கவங்க மாநிலத்துக்குப் போனா மட்டும் கன்னடனாகவோ மராட்டியனாகவோ தெலுங்கராகவோ மலையாளியாகவோ தான் இருக்காங்க.

தமிழ்நாட்டுக்காரன் மட்டும்தான் இந்தியனா இருக்கணும். அப்போதானே வேறெவனாவது ஆள்வான். இந்த இனா வானா தமிழன் அடிமையாகவே இருப்பான்.

அப்படியே இதை இங்கே இருக்கிற சூடு சுரணையற்ற தமிழர்கள்கிட்டேயும் “டே! தமிழனைத் தவிர வேற யாரையும் உங்களை ஆளவிடாதீங்கடான்னு சொன்னா நல்லாயிருக்கும்”. “தமிழகத்தை ஆள்வதற்காக இங்கே தமிழனைத் தவிர வேறு யாரும் அரசியலுக்கும் வராதீங்கன்னு சொன்னா நல்லாயிருக்கும்”.

அதேபோல கன்னடராய் நீங்கள் பேசிய அழுத்தம் திருத்தமான பேச்சையும் உணர்வையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். கொண்டாடுகிறோம்.

அதேபோல் எங்களை நாங்களே ஆளமுடியாமல் தவிக்கிறோமே அந்த வலிக்கும், புரையோடிப் போயிருக்கிற காயங்களுக்கும் மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறேன்.

அதனால் எங்களை நாங்களே ஆளும் விதமாக, தயாரிப்பாளர் சங்கப் பதவியை ஒரு வலுவான முன்னுதாரணமாக இருக்கும்பொருட்டு ராஜினாமா செய்யவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை உங்கள் உணர்வை நாங்கள் மதிப்பது போல எங்கள் உணர்வையும் மதிப்பீர்கள் என நம்புகிறேன். “நீங்கள் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை ஏற்படுத்துவீர்களானால் அப்போதாவது எம் மக்களுக்கு கொஞ்சமேனும் ‘ஏதாவது’ வரும்”.

உணர்ந்து முன்னுதாரணமாக மாறப்போவதற்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

Leave a Response