சென்னையின் இன்னொரு முகத்தைக் காட்டும் படம்- உறுமீன் பட தகவல்கள்

ஜிகர்தண்டா படத்தில் நடித்து 2014 ஆம் ஆண்டின் சிறந்ததுணை நடிகருக்கான தேசியவிருதைப் பெற்றிருக்கும் பாபி சிம்ஹா நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘உறுமீன்’.
இப்படத்தின் முன்னோட்டம் ஏப்ரல் 4 அன்று வெளியிடப்பட்டது. தேசியவிருது அறிவிக்கப்பட்ட பிறகு பாபிசிம்ஹா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக இனிப்புஅப்பம் (கேக்) வெட்டினார் பாபி.
சக்திவேல்பெருமாள்சாமி இயக்கும் இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், நாயகியாக ரேஷ்மி நடிக்கிறார். இவர்களோடு அப்புக்குட்டி, காளி வெங்கட், சான்ட்ரா, லுக்மேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இது விறுவிறுப்பான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பச்சையும், கருப்பையும் கலந்தால் சாம்பல் கலர் கிடைக்கும். காடுகளை குறிக்கும் நிறம் பச்சை. நகரத்தின் இன்னொரு முகத்தை சொல்வதற்கு கருப்பு குறியீடு. பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் உண்மை முகம் என்ன? என்பனவற்றை ‘உறுமீன்’ படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.
‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தின் கரு. ‘‘வேகமாக வேட்டையாடற உயரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான்.’’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘நேரம் படம் பண்ணின காலத்திலிருந்தே சிம்ஹா என் நண்பர். ‘ஜிகர்தண்டா’க்கு முன்னாடியே, இதை ஆரம்பிச்சிட்டோம். இந்தப்படத்திற்கு அப்புறம் சிம்ஹா இன்னும் பேசப்படுவார், ‘மெட்ராஸ்’ல அன்புவாக நடிச்ச கலையரசன் எதிர்மறைநாயகனா பண்றார். அவரையும் அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டு போகக்கூடிய படம் இது என்கிறார்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜி.டில்லிபாபு இப்படத்தை தயாரிக்கிறார். முதலில் இந்தப்படத்தை சிவபாலன் என்பவர் தயாரிப்பதாக இருந்தது. அவர் விலகிக் கொண்ட நேரத்தி திரைத்துறைக்கே சம்பந்தம் இல்லாத டில்லிபாபு கைகொடுத்திருக்கிறார்.இப்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறார்களாம்.

Leave a Response