ஏற்கெனவே தனியாரின் கட்டணக்கொள்ளை, அரசாங்கமும் பாடப்புத்தக விலையை உயர்த்துவதா? மக்கள் வேதனை

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வினியோகம் செய்யப்படுகிறது.
வரும் கல்வியாண்டுக்காக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும்.

1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானவை. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கல்வியாண்டில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி, திருத்தி அமைக்கப்பட்ட விலைப் பட்டியலை அனைத்து மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலர் சபீதா அனுப்பி வைத்தார். அதில், மூலப் பொருட்கள், பேப்பர் விலை, அச்சடிப்பு கட்டணம், நிர்வாக செலவு, விற்பனை செலவு உயர்ந்ததால் இந்தாண்டு முதல் பாடப் புத்தகங்களில் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான முப்பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மனையியல் புத்தகத்தின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இதேபோல, பதினொன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் ரூ.12.50-ல் இருந்து ரூ.30 ஆகவும், வரலாறு புத்தகம் ரூ.23-ல் இருந்து ரூ.50 ஆகவும், கணினி அறிவியல் தொகுதி-2 ரூ.30-லிருந்து ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில புத்தகம் ரூ.28-லிருந்து ரூ.60 ஆகவும், கணக்கு புத்தகம் (தொகுதி 1, தொகுதி-2) ரூ.27-லிருந்து ரூ.80 ஆகவும், தாவரவியல் புத்தகம் ரூ.27-லிருந்து ரூ.70 ஆகவும், விலங்கியல் புத்தகம் ரூ.24-லிருந்து ரூ.90 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணக்கொள்ளையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அரசு இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கின்றனர். மேலும், இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘புத்தகங்கள் விலையை அதிகபட்சம் ரூ.10 உயர்த்தி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான புத்தக விலை இருமடங்கு உயர்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை சலுகை விலை அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Leave a Response