“கல்வியால் தான் விவசாயம் அழிந்தது” ; தங்கர் பச்சான் அதிரடி பேச்சு..!


இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது.

இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கையால் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விருதுபெற்றவர்களில் திரையுலகை சேர்ந்த இயக்குனர், நடிகர் என இரு தளத்தில் இயங்கிவரும் தங்கர் பச்சான், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.

உழவே தலை 2017 சிறப்பு விருது பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகருமான தங்கர் பச்சான் பேசும்போது, “நானும் உழவனுடைய மகன் தான். இன்று உழவன் கைகட்டி பிச்சை எடுக்காத நிலை தான் பாக்கி.. இதற்கு அரசாங்கமும், பெரும் முதலாளிகளும் மட்டுமே காரணமல்ல, இளைஞர்களும் பொதுமக்களும் கூட காரணம் தான்.

இன்று நகரத்தில் இருக்கும் 7௦ சதவீதம் பேர் கிராமத்தில் நிலங்களை விற்றுவிட்டு பிழைக்க வந்தவர்கள் தான். கல்வி வந்ததும் தான் விவசாயம் அழிந்தது.. உண்மைதான், அதற்கு முன் விவசாயம் நன்றாக இருந்தது. மக்களும் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார்கள். இன்று நான் விவசாயம் செய்கிறேன்.. ஆனால் நாளை என் பிள்ளைகள் செய்யமாட்டார்கள்.. எனக்கு அந்த குற்ற உணர்ச்சி இப்போதும் இருக்கிறது.

உழவு என்பது தொழில் அல்ல. அது உயிரோடு கலந்துவிட்ட மூச்சுக்காற்று. பசுமைப்புரட்சி என்கிற பெயரில் மக்களை கொன்று வருகிறார்கள்.. விவசாயத்தை அழித்து வருகிறார்கள். மழையை நம்பி விவசாயம் செய்தவரை நிலத்தடி நீரை தொடவே இல்லை. ஆனால் இன்று ஆறு மலடாகிவிட்டது. பழைய விவசாய முறைக்கு மக்கள் மாறனும்.

விவசாயத்தை அழித்தவர்களுக்குத்தான் இப்போதெல்லாம் விருது வழங்கப்படுகிறது. அதற்கான ஆராய்ச்சிக்காக கோடிகளில் பணம் தரப்படுகிறது. அதனால் தான் ஏழெட்டு அரசு விருதுகளை நான் வாங்கவே இல்லை. நகரத்திற்கு வந்தவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்பவேண்டும்.. கூட்டுப்பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும்.. விவசாயி பணம் விவசாயிக்கே கிடைக்க.. இடையில் உள்ள தரகர்களை ஒழிக்கவேண்டும். அப்படி ஒரு திட்டம் என் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டு உள்ளது. இந்திரா ஆக்ரோடெக் சேர்மன் பூபேஷை பார்கும்போது, இனி வருங்காலத்தில் அந்த திட்டத்திற்கு உயிர்கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது’ என உணர்ச்சி பொங்க பேசினார் தங்கர் பச்சான்..

Leave a Response