குமரி மீனவர் போராட்டத்தைத் திசை திருப்பப் பயன்படும் விஷால், எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல கேரள கடல் பகுதியில் இறந்து போன மீனவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்களும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயிர் தப்பிய மீனவர்கள் பலரும் இதனை உறுதி செய்து வருகிறார்கள். தங்களோடு படகில் வந்த பலரும் கண் முன்பு கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் மூலம் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீனவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆனால் மாயமான மீனவர்கள் பற்றி அரசு தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக மீனவர்கள் கூறினர். எனவே ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பின்பே மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இன்று சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அரசுத்தரப்பில் இருந்து அமைச்சர் அளவில் பேசவேண்டிய விசயத்தைக் காவல் அதிகாரிகள் பேசினால் சரியாக வருமா?

போராடும் மக்கள், எங்களைக் கேரளாவோடு இணைத்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். இதைவிடவும் கேவலம் இந்த அரசுக்கு வேறெதுவுமில்லை. எனவே மீனவர் போராட்டம் பற்றிய செய்திகளைத் திசைதிருப்பவே விஷால் விசயத்தை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதை மெய்ப்பிக்கும் விதமாக மீனவர் போராட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய நியூஸ் 18 தொலைகாட்சி, திடீரென்று அதை நிறுத்திவிட்டு விஷால் மனுவின் மறுபரிசீலனை பற்றி விவாதிக்கிறது.

Leave a Response