குமரி மீனவர்களின் பெருந்துயருக்கு அரசே காரணம் – பூவுலகின்நண்பர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

பேரிடர் மேலாண்மை அலட்சியம்
தமிழக அரசின் மெத்தனமே மீனவர்கள் சோகத்திற்கு உச்சபட்ச காரணம் – பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

எவ்வளவு பெரிய, வேகமாக உருவெடுக்கக்கூடிய புயலாக இருந்தாலும் 36மணி நேரத்திற்கு முன்னமே கணிக்க முடியும் என்கின்றனர் வல்லுனர்கள்.

29ஆம் தேதி, புதன்கிழமை இந்திய வானிலை மையம் மாலை 4.15மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தென் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது.

அன்றைய தினமே ( 29,புதன்) சென்னை வானிலை மையம் “அடுத்த 48மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் குமரியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம்” என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

30ஆம் தேதி காலை 8.30மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் எனவும், குமரி , தென் தமிழகம், கேரள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம எனக் கூறியிருந்தது.

அன்றைய தினம் மதியம் 12மணிக்கு வெளியான செய்திக்குறிப்பில் காலை 8.30மணிக்கே தீவிர புயல் உருவாகிவிட்டது எனவும் காற்றும் வேகமாக வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்த செய்திக் குறிப்பில்தான் முதல்முறையாக “ஒக்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

29ஆம் தேதி வானிலை மைய அறிக்கை வெளியானபோதே குமரி மாவட்டத்தில் அதற்கு முந்தைய நாட்களில் கடலுக்குச் சென்றவர்கள் பட்டியலை எடுத்து அவர்கள் கரை திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் 30ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சத்யகோபால் குமரி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம், பேரிடர் மீட்பு குழுக்கள் அனுபியுள்ளோம் என மட்டுமே கூறினார். புயல் குறித்து அவர் கொடுத்த முதல் பேட்டி இது. அதில் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஏதும் சத்யகோபால தெரிவிக்கவில்லை. மழை சூறாவளிக் காற்றுடன் பெய்யத் தொடங்கி மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்த பிறகுதான் கடலோர மீனவ கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

29, 30, 1 ஆகிய மூன்று தேதிகளிலும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் மின்கம்பத்தையும், மரங்ககையும் வெட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது…

2ஆம் தேதி(இன்று) காலை செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் சத்யகோபால் “காணாமல் போன மீனவர்கள் குறித்து சரியாக கணக்கிட முடியாத நிலை உள்ளது. நூறு மீனவர்கள் வரை காணமல் போயிருக்கலாம்” என்று கூறினார். அதற்கு முன்பாகவே மீனவ மக்கள் ஆங்காங்கே தங்கள் உறவினர்கள் கரை திரும்பாததை உணர்ந்து, மீனவர்கள் நிலை பற்றி மறந்த அரசைக் கண்டித்து போராடத் தொடங்கியிருந்தனர். இந்த நிமிடம் வரை கடலுக்கு சென்றவர்கள் எத்தனை? திரும்பியவர்கள் எத்தனை? இறந்தவர்கள் எத்தனை? எந்த தகவலும் அரசிடம் தெளிவாக இல்லை.

பேரிடர் மேலாண்மை
1)Mitigation
2)Preparedness
3)Response
4)Recovery

ஏட்டில் மட்டுமே இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இன்று காலையே அமைச்சர்கள் நிதியுதவி அளிக்க தொடங்கிவிட்டனர். 36மணி நேரத்திற்கு முன்பே கணிக்கப்பட்ட பேரிடருக்கே பல உயிர்களை பலி கொடுத்துள்ளோம்.

அணுவுலை போன்ற திடீர் விபத்துகள் நேர்ந்தால் நம் கதி?

Leave a Response