
2009 ஆம் ஆண்டின் போருடன் ஈழத்தில் தமிழ் இனஅழிப்பு முடிந்துவிட்டதாக உலகம் நம்புகிறது.
ஆனால் சத்தமில்லாமல் உலகின் பார்வையினின்று மறைந்து ஒரு பாரிய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நம் தமிழ் மக்கள் மீது இந்த நிமிடம் வரை தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.
இத்தகைய இன அழிப்பில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான்.
உலகம் மறந்துவிட்ட எம் மக்களின் சொல்லொண்ணா துயர நிலையை ஆணித்தரமாக மனதை உலுக்கும் தரவுகளுடன் இயக்குனர் கவுதமனின் தொகுப்பில் ‘Pursuit of Justice’ என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படம், உலக நாடுகளின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூடும் ஐ.நா அவையில் திரையிடப்படுகிறது.
போருக்கு பிந்தைய கமுக்கமான இன அழிப்பின் பல்வேறு கோணங்களை நேரடி சாட்சிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் தரவுகள் மூலம் விளக்கும் இந்த ஆவணப்படம் நிச்சயமாக உலக அரங்கில் மனித உரிமை மீது பற்றுள்ள அனைவரின் மனசாட்சியையும் உலுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தமிழீழ விடியலுக்கான இத்தனை ஆண்டு கால தொடர் போராட்டங்களில் தமிழகத்தில் இருந்து ஐநா அவையில் ஒரு ஆவணப்படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணப்படத்தை தமிழ் மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஏ.வி.எம் திரையரங்கில் 25-மார்ச்-2015 மாலை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர். திரு. சத்யராஜ், திரு. சீமான், திரு. பெ. மணியரசன், திரு. ஜவாஹிருல்லா, திரு. த. வெள்ளையன், எழுத்தாளர் திரு. ஞானி, திரு. புகழேந்தி தங்கராஜ், திரு. வி. சேகர், ஓவியர் திரு. வீரசந்தானம் மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தாய்த்தமிழ் உறவுகளாகிய நீங்களும் இந்த ஆவணப்படம் கூறும் உண்மைகளை தமிழ்கூறு நல்லுலகிற்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் இயக்குனர் கவுதமன்.
