தமிழர் அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசு – திருமாவளவன் கண்டனம்


இலங்கை- மலையகத்தில் தமிழர் அடையாளம் அழிப்பு!

அரசு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம்!

விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்!

இலங்கை தீவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமின்றி மலையகப் பகுதிகளிலும் இலட்சகணக்கான தமிழர்கள் வசித்து வருவதை அறிவோம். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்கென அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் தோட்டத் தொழிலாளர்களாகக் கடுமையாக உழைத்து இலங்கையின் பொருளாதார வளத்தை மேம்படுத்தினர்.

அன்றைய தோட்ட முதலாளிகளான வெள்ளையர்களின் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி, குதிரை லாயங்களில் கொத்தடிமைகளாக கிடந்து உழன்றனர். குடியுரிமை, வாக்குரிமை, கல்வியுரிமை உள்ளிட்ட வாழ்வுரிமைகள் ஏதுமின்றி அவர்கள் சொல்லொணா துன்பங்களில் சிக்கிச் சிதைந்தனர். அத்தகைய காலகட்டத்தில் அவர்களுக்கான பாதுகாவலராகத் தோன்றியவர் தான் ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்.

இலங்கை நாடு, வெள்ளையர்களின்
ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர், 1960-களில் உருவான ‘சாஸ்திரி-பண்டா’ ஒப்பந்தப்படி சுமார் 5 இலட்சம் தமிழர்கள் இந்தியா திரும்பிவிட்ட நிலையில், எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான சூழலில், இடையறாமல் போராடி அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய பெருமைக்குரியவர்தான் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்.

மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், மத்திய மாகாணத்தில், “தொண்டமான் தொழிற்பயிற்சி மையம்” , “தொண்டமான் கலாச்சார மன்றம்” , “தொண்டமான் மைதானம்” என சில அரசு நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன. இவற்றில், தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்திற்கு இந்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கான தலைவராகச் செயல்லபட்டார் என்றாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பூர்வீகத் த்தமிழர்களின் மொழியுரிமைகள் மற்றும் இனஉரிமைகளுக்காகவும் குரலெழுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தமிழர் தலைவரான அவரது பெயரை, மேற்சொன்ன மையங்கள் மற்றும் மைதானத்தின் பெயர்களிலிருந்து தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்குப் பதிலாக அந்தந்தப் பகுதியின் பெயரை இணைத்துள்ளனர்.

சிங்கள ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களுக்காக தமது இறுதி மூச்சு வரையில்
பாடுபட்ட திரு. தொண்டமான் அவர்களை அவமதிப்பதாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

அத்துடன், இது மலையகத்தில் மெல்ல மெல்ல தமிழரின் அடையாளத்தை அழிக்கிற உள்நோக்கம் கொண்ட சதி முயற்சியாகவும் தெரிகிறது. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இவ்வாறே தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் அப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுப்பட்டனர். அதன் எதிர்விளைவாகவே அங்கே விடுதலைப்போராட்டம் வெடித்தது என்பதை சிங்கள ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டுவது நம் கடமையாகிறது.

தற்போது மலையகத்தில் தமிழர்களின் அடையாளங்களை, வரலாற்றுச்சுவடுகளை அழிப்பதை எவ்வாறு வேடிக்கைப் பார்க்க இயலும் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆங்காங்கே அறப்போராட்டங்களில் தமிழ்மக்கள் ஈடுபட்டுவருகின்றனர் என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தப் போராட்டங்கள் மலையகத்தில் மென்மேலும் வலுப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

சிங்கள ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை இந்திய அரசும் கண்டிக்க வேண்டும். அத்துடன்,இந்நிலைபாட்டை கைவிட்டு மீண்டும் திரு.தொண்டமான் பெயரைச் சூட்டவேண்டுமாறு சிங்கள அரசை இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

Leave a Response