யாழ் முதல்வரின் அதிரடிப் பேச்சுகள் – நெருக்கடியில் சிங்கள அரசு

தமிழர்நிலங்களைத் திரும்பத்தருவதாக சிங்களர்கள் சொல்கிறார்களே தவிர உண்மையில் அப்படி நடக்கவில்லை என்று சிங்கள அதிபர் மைத்திரி கலந்துகொண்ட விழாவில் பேசி சிங்களர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய யாழ் முதல்வர் விக்னேசுவரன், அடுத்த அதிரடியாக ஒற்றையாட்சி முறையைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் சிங்கள அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில்,  நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிங்களம் நாட்டின் அரசியல் மொழி என்று சரத்து 18(1) கூறுகின்றது. 18(2)ன் படி தமிழும் ஒரு அரசியல் மொழி என்கின்றது. எதற்காக தமிழும் சிங்களமும் நாட்டின் அரசியல் மொழிகள் என்று குறிப்பிடப்படவில்லை? சிங்கள மொழியை ஒருபடி மேலே வைக்கவே இந்த ஏற்பாடு.

எப்பொழுது தேசிய மட்டத்தில் ஒரு மொழி இன்னொரு மொழிக்கு உயர்வாகக் காட்டப்படுகின்றதோ அது இரு மொழிசார் மக்களிடையே ஒற்றுமையையும் சமநிலையையும் ஏற்படுத்த உதவாது. எனவே எமது மொழி, மதம் பற்றிய அரசியல் யாப்பின் ஏற்பாடுகள் நல்லாட்சிக்கு ஏற்புடைத்தாவன அல்ல.

இன்னொரு உதாரணம் தருகின்றேன் – பயங்கரவாதத் தடைச்சட்டம்  என்று ஒன்று 1979ம் ஆண்டில் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டது. அது கடந்த 35 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகியும் அது நடைமுறையில் இருந்து வருகின்றது.

அதாவது போர் முடிந்துள்ளது, ஜனநாயகம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறும் நாம் எதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? இவ்வாறான சட்டங்கள் நல்லாட்சிக்கு இடமளிக்கா.

எம்நாடு ஒற்றையாட்சிமுறை கொண்ட நாடு என்று அரசியல் யாப்பின் சரத்து 2 குறிப்பிடுகின்றது. ஒற்றையாட்சி முறைபற்றி ஒரு முக்கிய கருத்தை வெளியிட வேண்டும். 1833ம் ஆண்டு வரை வடகிழக்கு மாகாணங்கள் வேறாகவும், மலைநாட்டு மாகாணங்கள் இன்னொரு கூறாகவும், கீழ்நாட்டு மாகாணங்கள் மற்றொரு கூறாகவும் தென்பகுதி மாகாணங்கள் மேலுமொரு கூறாகவும் நான்கு பிரிவுகளாக இருந்தன.

இவை கிட்டத்தட்ட சுதந்திரமான அலகுகளாகத் தம்மிடையே வேறுபாட்டை வைத்துக் கொண்டே இயங்கி வந்தன. வடகிழக்கு மாகாண மக்கள் வேறு மொழி, வேறு மதங்கள், வேறு நடைஉடை பாவனைகளைக் கொண்டிருந்தனர்.

1833ம் ஆண்டில் நிர்வாக செயற்திறன் கருதி எல்லா கூறுகளையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்தார்கள். இதன் காரணத்தினால் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடகிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட மற்றைய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன.

அந்த இணைப்பின் நிமித்தம் தாமாக சுயாதீனமாக இயங்கி வந்த மக்கட் கூட்டம் மற்றையவருடன் சேர்த்துப் பார்த்தபோது தமது சுயாதீனத்தையும் பெரும்பான்மைத் தன்மைகளையுந் தொலைத்து விட்டவர்களாகவே தென்பட்டார்கள். மற்றைய ஏழு மாகாணங்கள் சேர்ந்து இயற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மற்றைய மாகாணங்களுடன் சேர்க்கப்பட்டபோது முழு நாட்டின் சிறுபான்மையினர் ஆகினர். இரு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் ஏழு மாகாணப் பெரும்பான்மையினருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் அந்த வடகிழக்குப் பெரும்பான்மையினர் நாட்டில் சிறுபான்னையினர் ஆகினர்.

இதனை வலியுறுத்துவதாகவே ஒற்றையாட்சி அரசியல் யாப்பு அமைந்தது. வடகிழக்கு மாகாணங்களின் தனித்துவம் பேணப்படவில்லை. பௌத்தம், சிங்களம் ஆகியவற்றிற்கான முதன்மைத்துவத்தின் காரணமாக அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை தமிழ்ப்பேசும் மற்றைய மத மக்களை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கிவிட்டன. ஆகவே அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை நல்லாட்சிக்கு வித்திடவில்லை.

13வது திருத்தச் சட்டம் மாகாணங்களுக்கு ஒரு கையால் கொடுத்து மற்றக்கையால் திருப்பி எடுப்பதாவே அமைந்துள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுப்பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை, அடக்கியாளும் அதிகாரங்களைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் வடகிழக்கு மாகாண மக்களைப் பொறுத்த வரையில் நல்லாட்சிக்கு வித்திடுவதாக இல்லை.

ஆகவே இப்படியான கட்டமைப்புக்களின் மத்தியில் நல்லாட்சியை உருவாக்க முடியுமா அதற்கான மக்களின் வாய்ப்புக்கள் என்ன என்பது தான் நாங்கள் இறுதியாக ஆராய வேண்டிய விடயம்.

வடமாகாணத்தில் தமிழ்ப்பேசும் மக்களிடையே தமிழில் பேசுவதால் தமிழ்மக்கள் என்ற சொல்லுக்குப் பதிலாக, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அர்த்தமே பொருத்தம் எனக் கணிக்கின்றேன். எனவே நல்லாட்சியுடனான புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிக் கொள்ளுவதற்கு தற்போது நிலவுகின்ற கட்டமைப்புக்குள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்களையே நான் இனி ஆராய வேண்டியிருக்கின்றது.

ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம், சிங்கள மொழிக்கு முதலிடம், பயங்கரவாதத் தடைச் சட்டம், 13வது திருத்தச் சட்டம் என்று பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தான் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

இப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது என்பதே எனது வாதம்.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

Leave a Response