மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கத்துக்கு புதிய பதவி

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி தேசிய கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.

அந்த கல்வி நிறுவனத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்ட மேற்படிப்பு இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த கல்லூரி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் நேரடியாக நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இங்கு முதுகலை பட்ட மேற்படிப்புகளாக அறிவுரை உளவியல், பாலினம் குறித்த கல்வி, உள்ளாட்சி மற்றும் வளர்ச்சி, சமூக புத்தமைப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான கல்வி, சமூக சேவை (இளைஞர் மற்றும் சமுதாய மேம்பாடு) வளர்ச்சி குறித்த கொள்கை மற்றும் பயிற்சி ஆகிய 6 துறைகளில் கல்வி அளிக்கப்படுகிறது. இவை தவிர ஆடை வடிவமைத்தல் மற்றும் தொழில் முனைவோருக்கான கல்வி, நவநாகரீக ஆடை வடிவமைப்பு குறித்த கல்வி ஆகிய 2 பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகளும் மற்றும் பல்வேறு ஓராண்டு பட்டயப் படிப்புகளும், ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகளில் பணி செய்வோருக்கு குறுகியகால பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. டாக்டர் பட்ட ஆய்வுகளுக்கான கல்வியும் நடைபெறுகின்றது.

இந்த நிறுவனம் 1993ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. 2012ம் ஆண்டு பாராளுமன்றச் சட்ட எண்.35ஃ2012ன் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் (Institute of National Importance) என்னும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் செயலாட்சி மன்றத்தின் புதிய தலைவராக அந்த நிறுவனத்தின் வருகையாளராக (Visitor) உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர். மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களதல் பரிந்துரைக்கப்பட்டு, முன்னாள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர். முனைவர். பேராசிரியர் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சொக்கலிங்கம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் பேராசிரியர் மதன் மோகன் கோயல் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகக் குற்றவியல் துறையின் தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சார்ந்தவர்

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ஐப்பான் நாட்டின் டோக்கியா பல்கலைகழகத்தில் 6 ஆண்டுகள் பாதிக்கப்பட்டோரியல் பேராசிரியராகவும், டெல்லியிலுள்ள தேசியச் சட்ட பல்கலைகழகத்தில் இரண்டு ஆண்டுகள் குற்றவியல் சட்டத்தின் இருக்கை பேராசிரியராகவம் பணியாற்றியுள்ளார்.

1992ம் ஆண்டு முதல் இந்திய பாதிக்கபட்டோரியல் என்னும் அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து பாதிக்கப்பட்டோர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.

மேலும் உலக பாதிக்கப்பட்டோரியல் கழகத்தின் (world society of Victimology) 26 ஆண்டுகளாக ஆயுள்கால உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் தற்பொழுது துணைத்தலைவராகவும் உள்ளார்.
விருதுகள்

குற்றவியல் மற்றும் பாதிக்கப்பட்டோரியல் ஆகியவற்றிற்காக இவர் ஆற்றிய பங்கினை கருத்தில் கொண்டு அமெரிக்கக் குற்றவியல் கழகம், இந்திய குற்றவியல் கழகம், பல்கலைகழக மானியக்குழு, தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றம் தொழில்நுட்பக் கழகம் ஆகிய நிறுவனங்கள் இவருடைய சேவையை பாராட்டி உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியப் பாதிக்கப்பட்டோரியல் கழகம் இவரது பெயரால் ‘பேராசிரியர் சொக்கலிங்கம் விருது’ என்னும் விருதினை உருவாக்கி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விருது பாதிக்கப்பட்டோரியல் ஆய்வில் சிறந்த ஓர் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர் குமரி மகாசபா என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் கவுரவத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Response