சீனாவுடன் திருப்பூர் போட்டிபோட ஜிஎஸ்டி வரி குறைப்பு கட்டாயம் – ஸ்மிருதிராணியிடம் திருப்பூர் எம்பி நேரில் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதிராணியை நேரில் சந்தித்து, கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் மையம் அமைக்க சிறப்பு நிதி உதவி வழங்குவது (பின்னலாடை வாரியத்தை அமைப்பது) தொடர்பாகக். கடிதம் அளித்துள்ளார் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா எம்.பி.

அதன் விவரம் :

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

பின்னலாடை வாரியத்தை அமைப்பது பற்றிய அறிவிப்புக்கும், அடுத்த மூன்றாண்டுகளில் நாட்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை, குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர, 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியை வழங்கியமைக்கும் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

அடுத்த மூன்றாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி இலக்கை தற்போதைய 1700 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலிருந்து 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு உயர்த்தவும் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, குறிப்பாக பெண்களுக்கு அந்த வேலைகளை வழங்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் (TEA) இதர ஏற்றுமதி அமைப்புகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.

குறிக்கோள் சார்ந்த 74000 கோடி ரூபாய் இலக்குக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதிக அளவில் அடிநிலைப் பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

பின்னலாடைத் துறை மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக உருவெடுத்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தரவுகளின்படி, திருப்பூரில் இருந்து 55 சதவிகித ஏற்றுமதி ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் 35 சதவிகிதப் பொருட்கள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய 10 சதவிகிதம் மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, இராக், துருக்கி, சௌதி அரேபியா, யேமன், சிரியா, இஸ்ரேல் போன்றவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர், நாட்டின் பின்னலாடைத் தொழிலுக்கான தலைநகரமாக உருவெடுத்துள்ளதோடு நாட்டின் மொத்த ஆடை உற்பத்தியில் 50 சதவிகிதப் பங்களிப்பை அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் உற்பத்தியான ஒவ்வொரு இரண்டாவது பின்னலாடையும் திருப்பூரில் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடலாம். நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதித் தொழில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு நுகர்வுக்கான திருப்பூர் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை சப்ளை செய்துள்ளது; இது நாட்டின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் பாதியாகும்.

திருப்பூர் பின்னலாடைத் தொழில்மையம் ஒவ்வொரு ஆண்டும் 15 உதல் 20 சதவிகிதம் வரை வளர்ச்சி பெற்று உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் மொத்தம் 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருடத்துக்கு தொழில் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுத்துள்ளது.

ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் 800 நிறுவனங்கள் திருப்பூரில் உள்ள நிலையில் இத்துறை சார்ந்த 1200 வணிக ஏற்றுமதியாளர்களும் செயல்படுகின்றனர்.

அவற்றில் ஆடை உற்பத்தி செய்யும் 300 நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தைகளுக்கான ஆடைகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றன.

குறிப்பிட்ட வேலை சார்ந்த ஆடை உற்பத்தி மையங்கள் 1800 என்ற எண்ணிக்கையிலும் சாயப்பட்டறைகள் 425-ம், பல்வேறு வகைகளில் ஆடைகளுக்கு மெருகேற்றி இத் தொழிலுக்கு துணை புரியும் வேறு 3085 நிறுவனங்களும் திருப்பூரில் அமைந்துள்ளன.

மொத்தமாக திருப்பூரில் ஜவுளித் தொழிலில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாக ஈடுபட்டுள்ளனர்.

எனவே மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் மையம் உருவாக ஒருங்கிணைந்த சிறப்பு நிதியை ஒதுக்கித்தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு இந்தியப் பிரதமரின் குறிக்கோளுக்கு ஏற்ப 2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட திருப்பூர் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் வளர்ச்சிக்கான பாதை துரிதமாக அமைக்கப்படும்போதுதான் இது சாத்தியப்படும்.

உள்நாட்டுச் சந்தை குறிப்பாக வட இந்தியச் சந்தைகளில் சீன மற்றும் வங்கதேசப் பொருட்கள் அதிகமாக விற்பனைக்குக் குவிந்து வருகின்றன. சீன மற்றும் வங்கதேசப் பொருட்களுடன் ஒப்பிடும்போது நமது பொருட்கள் உயர்தரத்திலும் சிறந்த வடிவமைப்பிலும் உள்ளன. ஆனால் அவை நமது பொருட்களைவிட 25 சதவிகிதம் விலை மலிவாக இருப்பதால் சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பும் விலை மலிவான வெளிநாட்டுப் பொருட்களை இந்தியாவில் விற்பதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அவைமீது தனித்தீர்வை (anti-dumping duty) விதிப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது.

விலைகளோடு தொடர்புடைய உலக சந்தையில் போட்டிபோடுவதற்கு நமது ஆடை ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஐரோப்பிய யூனியனின் சந்தையில் தீர்வையற்ற தகுதியுடன் சலுகைகளை அனுபவிக்கும் வங்கதேசம் கம்போடியா இலங்கை ஆகிய நாடுகளுடன் போட்டிபோட முடியாமல் நமது நாட்டின் ஆடை ஏற்றுமதியாளர்கள் திணறுகின்றனர்.

மேலும் வியத்நாம் ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.

புதிய சந்தைகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதும், உலக சந்தைகளின் போக்குக்கு ஏற்ப இறக்குமதி வரி ஏற்கனவே செலுத்தப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி வரியில் அளிக்கப்படும் சலுகையை அதிகரிப்பதும் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களே, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலான ஏற்றுமதி மேம்பாட்டு மூலதனப் பொருட்கள் திட்டத்தின் கீழ் மூலதனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைந்த ஜி எஸ் டி (ஐ ஜி எஸ் டி) போன்றவற்றைச் செலுத்தவேண்டும்.

அதே போன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு சபை AEPC மூலமாக ஏற்றுமதிச் செயல்பாட்டுக்கான சான்றிதழ் பெற்று சாதனங்களை இறக்குமதி செய்தாலும் ஐ.ஜி.எஸ்.டி செலுத்தவேண்டி உள்ளது.

ஆனால் ஜி எஸ் டி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் சுங்க வரிகள் எதுவும் செலுத்தாமல் முழு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. MIES திட்டத்தின் கீழ் தீர்வைக்கான சலுகைகள் Duty Credit Scrip என்கிற பாஸ் வழங்கும் திட்டத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் FOB (Free On Board) மதிப்பில் 2 சதவிகிதம் என்ற நிலையில் கிடைத்துவந்தன.

இப்போது அந்தச் சலுகை அடிப்படை சுங்க வரிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த MIES Duty Credit Scrip என்ற பட்டையைப் பயன்படுத்தி அடிப்படை சுங்க வரிகளோடு ஒருங்கிணைந்த ஜி எஸ் டி வரியையும் செலுத்த அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பெருநகரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குள் பொருள் போக்குவரத்துக்கு மின்னணு ரசீது எனப்படும் இ-வே பில் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் போன்ற தொழில் மையத்தில் தொழில் செய்யும் இடங்கள் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன.

எனவே இ-வே பில் இல்லாமல் பொருட்களை போக்குவரத்து செய்ய விதிக்கப்பட்டுள்ள 10 கிலோமீட்டர் என்ற தூர வரம்பை 30 கிலோமீட்டர் என்று அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

துணியாக உருவெடுக்கும் நிலையில் அதற்கு முன் பல நிலைகளில் கட்டிய வரிகளை திரும்பப்பெற வழியில்லை என்பதால் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட துணிகளுக்கான 5 சதவிகித ஜி எஸ் டி வரி விதிப்பு, தலைகீழ் வரி தொடர்பான பிரச்சனையை எழுப்புவதால் மனிதர்களால் உருவாக்கப்படும் நூல் இழைகளுக்கான ஜி எஸ் டி வரி விகிதத்தை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response