
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அவருக்கு பூச்செண்டு கொடுத்து கமல் வரவேற்றார்.
தனியறையில் சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை இருவரும் கூட்டாகச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள். அரவிந்த் கெஜ்ரிவாலும் நானும் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள். அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவரை வாழ்த்துவதன் மூலம் அவரை நான் கவுரவிக்க விரும்புகிறேன் என்று கமல் பேசினார்.
அடுத்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசனின் ரசிகன் நான். அவரது ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்பையும் அறிவேன். நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்தை உடையவர்கள். நாடு இன்று ஊழல் மற்றும் மதவாதத்தில் சிக்கி உள்ளது. நாங்கள் இருவரும் ஊழல் மற்றும் மதவாதத்தை எதிர்ப்பவர்கள். இன்று நாங்கள் இருவரும் அதைப்பற்றித்தான் பேசினோம். தைரியமும், நேர்மையும் கொண்ட கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும். இன்று நாங்கள் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். எதிர்காலத்திலும் இந்த சந்திப்பு தொடரும். இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.
சந்திப்பு எல்லோருக்கும் தெரிந்து நடந்தது. சந்திப்பில் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.இதுபற்றி கமல் அலுவலக வட்டாரங்களில் உலவும் பேச்சு என்ன தெரியுமா?
கமல் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று சொல்லியிருக்கிறார்.டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு வடமாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லை. எனவே கமல் போன்ற ஒருவர் வந்தால் தமிழகம் மட்டுமின்றி தென்மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்று எண்ணி, கமலை ஆம் ஆத்மி கட்சியில் சேரச்சொல்லி கெஜ்ரிவால் கேட்டதாகப் பேசப்படுகிறது. கமல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.


