நீட் தேர்வை நீக்கக்கோரி அரசாங்க வேலையை உதறிய ஆசிரியை – வாழ்த்துங்க அந்த வீரத்தமிழச்சியை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது வைரபுரம் கிராமம். அங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சபரிமாலா ஜெயகாந்தன்.

அவர், நேற்று (செப்டம்பர் 6-2017) காலை வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, தன் மகன் ஜெயசோஷனுடன் தான் பணிபுரியும் பள்ளியின் முன் அமர்ந்து ’இந்தியா முழுவதும் ஒரே கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் ’நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆசிரியை சபரிமாலா தனியாகப் போராட்டத்தைத் தொடங்கிய செய்தி காட்டுத் தீயாகப் பரவியதால் ஊர் மக்களும் இளைஞர்களும் அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கத் தயாரானார்கள்.

ஆனால், அதற்கு முன்பே அந்தத் தகவல் காவல்துறையினருக்குச் சென்றதால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாகக் காவல்நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.

ஆனாலும் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருந்த சபரிமாலா இன்று (செப்டம்பர் 7-2017) நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி தனது, அரசுப் பள்ளி ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

போராட்டத்தில் உறுதி காட்டாமல் பின்வாங்கியிருந்தால் அவர் பணியில் தொடர்ந்திருக்கலாம், ஆனாலும் ஏழை மாணவர்களின் கல்விஉரிமைக்காகத் தன்னுடைய அரசு வேலையை உதறிய அவரை எல்லோரும் பாராட்டுகின்றனர்.

Leave a Response