பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல வெற்றிகளைக் கொடுத்துப் புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார்.
பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார். அருண்ராஜாவையும் அவரது இயக்குநர் கனவையும் அறிந்தவர்கள் அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பையும் நன்கு அறிவார்கள்.
தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில்,
நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கியக் காரணமே இயக்குநராக வர வேண்டும் என்பதுதான். இயக்குநராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கனவாகவும் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்படப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.’வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் எனக்கு மேலும் உதவியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக இப்போது உணர்கிறேன்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். சமீபத்தில் பல இலட்சம் ரசிகர்களைக் கவர்ந்து கொண்டாட வைத்த இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பே இக்கதையைத் தயார் செய்துவிட்டேன்.
கனவுகளுக்காகப் போராடுவதும், அதற்குக் குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்றும், ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம்.
நெகிழவைக்கும் சில நிஜ வாழ்க்கைச் சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன். கிரிக்கெட்டும் ஆட தெரிந்த நடிக்கவும் தெரிந்த பெண்களை, கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளோன். இதுவரை வெளிவராத பல அரிய திறமைசாலிகளை இந்த ஆடிஷன் மூலமாக வெளிக்கொண்டுவந்து இப்படத்தை மெருகேற்ற உள்ளோம். எனது இந்த இயக்குநர் படலத்தை மிகவும் உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளேன் எனக்கூறினார் அருண்ராஜா காமராஜ்.