ஒரு போட்டியைக் கொடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. அதில் கலந்துகொண்ட காயத்ரி சொன்ன சேரிபிஹேவியர் என்ற சொல், ஜூலியை அவமானப்படுத்தியது, ஓவியாவை மனநலச் சிக்கலுக்குள்ளாக்கியதென பல சர்ச்சைகள். இப்போது புதிதாக ஒரு சர்ச்சை சேர்ந்திருக்கிறது.

அதுகுறித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், பிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான ஆட்சேபத்திற்கு உரிய சில விஷயங்கள் நடந்தேறின. Task ஒன்றில் தோற்ற அணி, ஜெயித்த அணிக்கு அடிமை என்பது போன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. வென்ற அணிக்கே வீட்டை உபயோகிக்கும் உரிமையுள்ளது என அறிவிக்கப்பட்டு தோற்ற அணியின் உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான் பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மனித சமத்துவத்தைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, வர்க்கம், பால் என்று பலவிதங்களில் பாரபட்சங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில சமூகங்கள் உயர்வுமனப்பான்மையினால் எளிய சமூகத்தினரை வதைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் தெருக்களில் செருப்பை காலில் அணியாமல் கையில் தூக்கி நடந்து செல்லும் சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்த போராட்டங்கள், பரப்புரைகளுக்கு பின்னரும் நிலைமையில் சொல்லிக் கொள்ளுமளவு முன்னேற்றம் இல்லை. இத்தகைய சூழலில் விளையாட்டுக்காக கூட ஆண்டைxஅடிமையின் கூறுகளை பயன்படுத்துவது கடுமையான ஆட்சேபத்திற்கு உரியது.

இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

ஆக இழந்த டிஆர்பியை மறுபடி பிடிக்கத் தயாராகிவிட்டார்கள்.

Leave a Response