ஒரு அறிமுக இயக்குனராக சிவகார்த்திகேயனை வைத்து ஹிட் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த ஹீரோக்களை தேடி செல்லாமல் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மட்டுமே பயணப்பட்டு வரும் இயக்குனர் பொன்ராம் நிச்சயம் வித்தியாசமானவர் தான்..
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும். தற்போது இவர்கள் ஹாட்ரிக் ஹிட்டுக்காக மீண்டும் இணைந்துள்ளனர்..
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, சிம்ரன் மற்றும் நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு படங்களிலும் தனது இசையால் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த இமான் தற்போது இந்தப்படத்தின் பாடல் உருவாக்கும் பணிகளை இன்றுமுதல் தொடங்கியுள்ளார்.. முந்தைய படங்களைப்போல இந்தப்படத்தின் பாடல்களும் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கலாம்.