ஆகஸ்ட் 17 – விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 55 ஆவது பிறந்தநாள்…
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக திருமாவளவனுடன் நேரடி அறிமுகம். துறைக்கு வந்ததிலிருந்தே அவரை கவனித்தும் தொடர்ந்தும் வந்திருக்கிறேன்.
உண்மையில் தமிழகத்தில் பிடித்த தலைவர்கள் என்று கேட்டால் நல்லகண்ணுவிற்கு பிறகு திருமாவளவன் என்பதை தயக்கமின்றி சொல்வேன்.
இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது.
பல வருடங்களுக்கு முன்பு குஷ்புவின் கருத்துகளுக்கு எதிராக தமிழகம் கொதளித்துக்கொண்டிருந்த காலகட்டம். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு ஆழி பதிப்பகத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திருமாவும் குஷ்புவும் கலந்து கொண்டார்கள். திருமாவை மேடையில் வைத்து குஷ்பு சில கருத்துகளை சொல்ல, பிரச்னையான சூழல் உருவானது. ஒருவாறு கலைந்து எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருமாவளவன் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது குஷ்பு பிரச்னைக்கு கட்சியினர் ஆற்றிய எதிர்வினை குறித்து எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்.
எல்லாவற்றையும் பொறுமையாகவே ஏற்றுக்கொண்டார் திருமாவளவன். இன்னொரு தலைவர் இதை செய்வாரா என்று தெரியவில்லை. அதன் பிறகும் அவர் பழகும் பேசும் விதத்தில் எந்த மாறுதலும் இல்லை.
விமர்சனங்களை சொல்வதாலேயே எதிரியாக பாவிக்கும் மனநிலை அவரிடம் இல்லை.. நான் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற பாடங்களில் இதுவும் ஒன்று.
பிறகு சந்தித்த நாள் தொடங்கி இன்று வரையில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான சமரசங்களுடனேயே இயங்கி வரும் ஒரு தலைவராக இருக்கிறார். சித்தாந்த ரீதியிலான அவரது தெளிவு கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன்.
தன்னை தலித் தலைவராக மட்டுமே பார்க்கும் திராவிட இயக்கங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கொடுக்கிறார் என்று அவர் மீது விமர்சனமிருக்கிறது.
அவர் நிச்சயமாக தலித் தலைவர் மட்டுமல்ல.
ஆனால் இந்துத்வ இயக்கங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்கு பதில் திராவிட இயக்கங்களுக்கு முட்டுக் கொடுப்பதை அவர் இன்றைய காலகட்டத்தில் ஒரு வியூகமாக கையாள்கிறார் என்று தோன்றுகிறது.
விமர்சிக்கலாம், ஆனால் நிராகரிக்க முடியாத தலைவர் அவர்.
பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்!
– கவிதாமுரளிதரன், பத்திரிகையாளர்