கல்வித்துறையைக் காவி மயப்படுத்தவே உதயசந்திரன் குறிவைக்கப்பட்டிருக்கிறார் – கவிதாமுரளிதரன்

கடந்த வாரம் ஜூனியர்விகடனில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியிருந்தது. சிறப்பாகப் பணி செய்து கொண்டிருக்கும் அதிகாரி ஒருவர் விரைவில் மாற்றப்படலாம் என்பதுதான் செய்தி. இது உதயச்சந்திரன் பற்றிய செய்திதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதைத் தொடர்ந்து சவுக்கு இணையதளத்தில் இந்தச் செய்தி விரிவாக வெளியாகி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாமானியர்களிடத்திலும் பேசு பொருள் ஆகும் அளவுக்கு பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் உதயச்சந்திரன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.

அவர் அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையும் மாணவர் நலனும் கொண்டவை.

இன்று கல்வித்துறை அசாதாரணமான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. நீட் பிரச்னையில் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இன்னொரு புறம் பிற மாநிலங்களில் கல்வித்துறையில் பா.ஜ.க செலுத்தி வரும் ஆதிக்கம் கவலைக்குரியது. கல்வித்துறையில் பாடத்திட்டங்களில் தமக்கு வசதியான மாற்றங்களை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநில பாடத்திட்டத்தில் மோடி அரசுக்கு ஆதரவான பல விஷயங்கள் புகுத்தப்பட்டிருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலின் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க நிச்சயம் அதை இங்கும் முயற்சி செய்யும்.

காரணம், தமிழகத்தில் இந்தத் தலைமுறையிடம் இல்லாத பா.ஜ.க ஆதரவை அடுத்தடுத்த தலைமுறைகளிடத்தில் கொண்டு வர வேண்டுமென்றால் அது கல்வித்துறையால் மட்டுமே முடியும் என்பது பா.ஜ.கவிற்கும் தெரியும். அதனால் இது நீண்டகால ஆதாயங்கள் கொண்ட ஒரு செயல்பாடு. இதில் பா.ஜ.க முழு மூச்சாக இறங்கி செயல்படும்.

இப்படியொரு நிலையில் உதயச்சந்திரன் மாதிரியான ஒரு அதிகாரியை நீக்கிவிட்டு அவர்களுக்கு ஆதரவான அல்லது கண்டுகொள்ளாத ஒரு அதிகாரியைக் கொண்டு வருவது என்பது, வெளிப்படையாக பா.ஜ.கவின் செயல்திட்டத்திற்கு உதவும் ஒரு செயல். அதில் அ.தி.மு.கவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் பொது சமூகமும் இதற்கு இணங்கிப் போகுமா என்பதுதான் நம்முன் இப்போதிருக்கும் கேள்வி. அறிவுச் சமூகமும் சிவில் சமூகமும் இப்போது கேள்வி எழுப்பவில்லையென்றால் நாம் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை இழக்க நேரிடும்.

– கவிதா முரளிதரன்

Leave a Response