எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஜூலை 21, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் விருது கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது பேரா. அ. மார்க்ஸ் அவர்களுக்கும், காமராஜர் விருது பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களுக்கும், காயிதே மில்லத் விருது கேப்டன் அமீர் அலிக்கும், நம்மாழ்வார் விருது சுப.உதயகுமார் அவர்களுக்கும், அன்னை தெரசா விருது மறைந்த எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்களுக்கும், கவிக்கோ விருது சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
சுப.உதயகுமாரனுக்கு நம்மாழ்வார் விருது கிடைத்திருப்பதையொட்டி பூவுலகின்நண்பர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு உதயகுமார் அவர்களுக்கு SDPI கட்சி , நம்மாழ்வார் விருது, வழங்கியது சாலப் பொருத்தமானது.
இந்தியாவை மட்டுமல்ல உலகத்தை இடிந்தகரை என்கிற சிறிய கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் மக்கள் போராட்டதை ஒருங்கிணைத்தவர், எளிய மக்களும் அறத்தின்பால் நின்று வலிமை பொருந்திய அணுசக்தித் துறையை இறங்கி வரவைக்க முடியும் என்று நிரூபித்தவர். இன்று தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சூழல் காப்புப் போராட்டங்களுக்கு முன்மாதிரியாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்களை அமைதி வழியில் நடத்தி பொது சமூகத்தில் அணுசக்தி குறித்த விவாதத்தை தொடங்கிவைத்தவர், காந்தியவாதி, பாசிச எதிர்ப்பாளர் என்கிற பன்முகத்தன்மை கொண்ட சுப.உதயகுமார் அவர்களை பூவுலகின் நண்பர்கள் வாழ்த்துகிறோம்.
உதயகுமார் அவர்களுக்கு நம்மாழ்வார் விருதை வழங்கி, அவர் தனியாள் அல்ல, ஒட்டுமொத்த மக்களும் அவருடன் நிற்கிறோம் என்று சொல்லும் SDPI கட்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.
விருதுகள் நிச்சயம் அவருக்கு மேலும் ஊக்கம் கொடுத்து இன்னும் அதிகமான மக்கள் சேவை செய்ய வழிவகுக்கும் என்று நம்புகிறோம். என்று பூவுலகின் நண்பர்கள் செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
விருது கிடைத்ததையொட்டி சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது,
SDPI கட்சி அளித்திருக்கும் ஐயா நம்மாழ்வார் பெயரிலான விருது எனக்கு தனிப்பட்ட முறையில் தரப்பட்டதல்ல. பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோரும் ஒருங்கே வந்து விருதைப் பெற்றுக்கொள்ள இயலாத காரணத்தால், அவர்களின் பிரதிநிதியாக நான் பெற்றுக்கொள்கிறேன், அவ்வளவுதான். பரிசுத்தொகையான ரூ. 25,000-த்தை இடிந்தகரை போராட்ட வழக்கு நிதியாக பயன்படுத்துமாறு வழ. செம்மணி, வழ. ரமேஷ், வழ. ஆன்றன், மை. பா. சேசுராஜ் ஆகியோர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கிறேன். SDPI கட்சித் தோழர்கள், குறிப்பாக தமிழ் மாநிலத் தலைவர், எனது உடன்பிறவா சகோதரர், திரு. தெஹ்லான் பாகவி அவர்களுக்கு போராடும் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சுப. உதயகுமாரன் கூறியிருக்கிறார்.