ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் – நாடாளுமன்றத்தில் சத்யபாமா பேச்சு

திருப்பூர் தொகுதி அ இ அ தி முக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மக்களவையில் விதி எண் 377 இன் கீழ் மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜூலை 21 அன்று பேசியது:

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனடியாக ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை உட்பட தமிழ்நாட்டில் ஐந்து இடங்களை இதற்காகத் தெரிவு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.

மத்தியக்குழுவும் இந்த இடங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பார்வையிட்டது. ஆனால் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்படும் என்று மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்தவித தாமதமும் இன்றி தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்குமாறு மாண்புமிகு பாரதப் பிரதமரிடம் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டார்.

பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி 327 ஏக்கர் பரப்பில் பசுமையாக படர்ந்துள்ளது. இது ஈரோடு கோயம்புத்தூர் நெடுஞ்சாலையிலிருந்து 20 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது. கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெருந்துறை நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47 ஐ வெகு சுலபமாக அணுகும் வகையில் இந்த இடம் அமைத்துள்ளதோடு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகளும் நோயாளிகள் சென்று வர சிறப்பாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமையுமானால் தமிழ்நாட்டில் மேற்கத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்பதோடு கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள். மருத்துவ வசதிக்கான தேவை பெருகி வரும் நிலையில் பெருந்துறையில் எயிம்ஸ் போன்றதொரு உயர் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும்.
எனவே ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையில் எயிம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவ மனையை அமைக்கப்போவதாக அறிவிப்பதோடு அதற்கான கட்டுமானப் பணிகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றுமாறு மாண்புமிகு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Response