சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதற்கு தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழக மக்களை அழிக்கும் நாசகாரத் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் நெடுவாசல், கதிராமங்களம் மக்களுக்கு ஆதரவாகப் போராடியும்- பரப்புரையும் செய்த பல ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்த இயற்கை பாதுகாப்புக் குழு பொறுப்பாளர் தோழர் வளர்மதி இன்றைக்கு(17-07-2017 திங்கள்) இந்திய அரசின் அடிமையாகச் செயல்படும் தமிழக அரசினால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தோழர்வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழக அரசின் பாசிச செயல்பாடுக்கு தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழக அரசியல் வரலாற்றில் சமுகச் செயல்பாட்டுக்காக ஒரு பெண் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்பு கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போரட்டத்தில் 2012-இல் 6 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் தோழர். மதியழகன் 2015-லும், 2017-இல் மே 21 ஆம் தேதி சென்னையில் நினைவேந்தல் நடத்தக் கூடிய தோழர். திருமுருகன், தோழர். டைசன், தோழர். இளமாறன், தோழர். அருண்குமார் ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே ஆண்கள். இப்போதுதான் முதன்முதலில் ஒரு பெண்ணாக தோழர் வளர்மதி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் தடா சட்டத்தில் 1992-இல் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும், 2002-இல் தர்மபுரி ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி பெற்றதாக மக்கள் யுத்தம் அமைப்பை சேர்ந்த பல பெண் தோழர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைக்காக பெண்கள் யாரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இதுவரை கைது செய்யப்படவில்லை. 23 வயதான தோழர் வளர்மதி அவர்களின் கைதே முதன்முதலான கைதாகும்.
தோழர் வளர்மதி கைது எதற்க்காக?
தோழர் வளர்மதி அவர்கள் மாணவர் பொதுநல எழுச்சி இயக்கம் என்ற அமைப்பில் செயல்படுபவர். தற்போது மாணவர் பொதுநல எழுச்சி இயக்கம் உட்பட பல ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் இயற்கை பாதுகாப்புக் குழு என்ற அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இயற்கை பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது
தோழர் வளர்மதி அவர்கள் சார்ந்துள்ள மாணவர் பொதுநல எழுச்சி இயக்கம், இயற்கை பாதுகாப்புக் குழு ஆகிய எந்த அமைப்புகளும் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல.
தோழர் வளர்மதி அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் படிக்கும் போது 2015-இல் மாணவர் பிரச்சினைக்காகப் போராடி சிறை சென்றுள்ளார். கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருட்டிணன் இறந்த போது பல்வேறு மாணவர் இயக்கங்களோடு இணைந்து நின்று சேலத்தில் சாலைமறியல் செய்தும், 2017-இல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு மாணவர் இயக்கங்களோடு இணைந்து நின்று சேலத்தில் சாலைமறியல் செய்தும் கைதாகி உடனடியாக விடுதலை ஆகியுள்ளார். அவர் சார்ந்த இயற்கை பாதுகாப்புக் குழு அமைப்பின் சார்பாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக தொடர்வண்டியில் பரப்புரை செய்து வரும் போது 2017 ஏப்ரலில் குளித்தலையில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்து மே மாதம் விடுதலையானார்.
கடந்த ஜூலை-12 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் துண்டுப் பிரசுரங்களை மட்டுமே கொடுத்து மாணவர்கள் மத்தியில் சேலத்தில் தோழர் வளர்மதியும், அவரோடு குளித்தலையில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்து விடுதலையாகி கேரளாவில் படித்து வரும் தோழர் சுவாதி தாயாரான தோழர்.ஜெயந்தியும் மாணவர்களிடம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை பிரசாரம் செய்துள்ளனர். வேறு எந்த நிகழ்வும் அங்கு நடக்கவில்லை.
இவர்கள் பிரசாரம் செய்யும் தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர் இவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை காவல்நிலையங்களில் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர். பின்னிட்டு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வைத்து ” தோழர் வளர்மதியாகிய தான் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர் என்றும், அந்த இயக்கத்திற்காக மாணவர்களை மூளைச் சலவை செய்தார் என்றும், தான் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்றும், தோழர் வளர்மதிமதியாகிய தனது சட்டவிரோத செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை அவரது பெற்றோர் வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும்” பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைத் தயார்செய்து கையெழுத்து போடச் சொல்லி காவல்துறையால் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஒப்புதல் வாக்குமூலம் எதிலும் கையெழுத்திடவில்லை.
ஜூலை-12 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் தான் இவர்கள் இருவரும் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அங்கு தோழர் ஜெயந்தி மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட்டு உள்ளார். தோழர். வளர்மதி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகச் சொல்லி காவல்துறையினர் முறையிட அவர் மட்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தோழர். வளர்மதி சிறையில் அடைக்கப்பட்டது முதல் தான் சட்டப்புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தொடர்ந்து இன்றுவரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்றைக்கு(17-07-2017 திங்கள்) சேலம் காவல் ஆணையரால் தோழர் வளர்மதி மீது குண்டர் தடுப்புக் காவல் ஆணை போடப்பட்டு கைது செய்யப்பட்டு சேலத்தில் இருந்து கோவை பெண்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
துண்டறிக்கை, மக்களிடம் பரப்புரை, போராடும் மக்களுக்கு ஆதரவு என அரசு அனுமதித்த போராட்ட வடிவங்களில் செயல்பட்டு வந்த தோழர். வளர்மதியை பெண்ணென்றும் பாராமல் குண்டர் என சிறையில் அடைத்ததன் மூலம் அராஜகத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறது இந்திய அரசின் அடிமையாக செயல்படும் தமிழக அரசு.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களோடு இருப்பதாக சட்டமன்றத்திலும்- பொதுவெளியிலும் சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடும் தோழர். வளர்மதி போன்றோர்களை பொய் குற்றசாட்டில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது என்பது தமிழக அரசின் பொய்முகத்தை, போலித்தனத்தை மக்களை வாய்வார்த்தையில் ஏமாற்றும் வித்தையை தோலுரித்துக் காட்டுகிறது.
நினைவேந்தலுக்கு மெழுகுவத்தி ஏந்திய தோழர். திருமுருகன் காந்தி உட்பட நான்கு தோழர்களையும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வழங்கியதாக தோழர். வளர்மதியையும் குண்டர் என தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தும்; கதிராமங்களத்தில் போராடும் மக்களுக்கு துணை நின்றதற்காக பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை சிறையில் அடைத்தும், தமிழகத்தில் ஜனநாயகரீதியான நடவடிக்கைகளுக்கு வேகமாகக் கல்லறை எழுப்பி வருகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் வாழவாதார பிரச்சினைகளுக்கான போரட்டங்கள் தீவிரமாக வெடித்து வரும் இக்காலத்தில் தமிழக அரசின் இவ்வித நடவடிக்கையின் மூலம் சொல்லாமல் சொல்ல வரும் செய்தி ஒன்றே ஒன்றுதான். ” நாங்கள் என்ன செய்தாலும் அடங்கி இரு, இல்லையேல் அடக்கப்படுவாய் என்பதுதான்”.
தமிழக அரசைப் பொறுத்தவரை ஒரேநிலைதான். ஒன்று வழக்குகளைக் காட்டி போராளிகளையும், மக்களையும் அச்சுறுத்தப் பார்ப்பது, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது, பீதியூட்டுவது, மிரட்டுவது, மக்கள் எழுச்சிகளை தடுப்பது என்பதுதான். இந்த பாசிச அரசுகளின் வழிமுறையாக உள்ளது.
இன்று தமிழகத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், விவசாயிகள் போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம், ஓஎன்ஜிசி- மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டம், மணல்கொள்ளை எதிர்ப்பு போராட்டம், மதுக்கடை(டாஸ்மாக்) எதிர்ப்பு போராட்டம், அரசின் மாடு விற்பனை கட்டுப்பாட்டை எதிர்த்து என அரசின் பல்வேறு கொள்கைகளை எதிர்த்து சமரசம் இல்லா வீரமிக்க போராட்டங்கள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் தமிழகத்தில்தான் நடந்து வருகிறது.
”தன் உரிமைகளுக்காக போராடுபவர் யாராயிருப்பினும் அவர்களுக்கு சிறை தான் உரிது” என சர்வாதிகார மனப்பான்மையுடன் கொக்கரிக்கும் இந்த தமிழக அரசாங்கத்தின் அடக்குமுறையை அனைவரும் கண்டிப்போம்! தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இதை கண்டித்து அறிக்கை கொடுப்பதோடு மட்டும் இன்றி இதை எதிர்த்து மக்களை திரட்டி ஒன்றுபட்டு போராடி பொடாவையும்- தடாவையும் முறியடித்தது போல் முறியடிக்க வேண்டும். முறியடிப்போம்.
@ முகிலன் ,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம்,
மின் அஞ்சல் : mugilan1967@gmail.com 17.07.2017