தமிழகமக்களின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2, ஓஎன்ஜிசிக்கு 1 இடம்

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் நேற்று (அக்டோபர் 1,2018) கையெழுத்தானது.

தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த ஜனவரியில் ‘ஹெல்ப்’ எனும் தளர்த்தப்பட்ட ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமம் முறையில் டெண்டர் விடப்பட்டது. 13 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களுக்கு 9 நிறுவனங்களால் 110 டெண்டர்கள் கோரப்பட்டன.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (சிஜிஎச்) சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங் களுடன் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதில், தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41, ஆயில் இந்தியாவுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46, கடல் பகுதியில் 9 இடங்கள் அமைய உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சிதம்பரத்தை ஒட்டிய நிலப்பகுதியில் ஓர் இடம் கிடைத்துள்ளது.

ஓஏஎல்பி (Open Acreage Licensing Policy) எனப்படும் ஏக்கர் அளவிலான இந்த டெண்டர்கள் நெடுவாசலைவிட பல மடங்கு பெரிதானவை. எனவே, வேதாந்தா நிறுவனத்துக்கு 2,574 மற்றும் 1,794 சதுர கி.மீ. மற்றும் ஓஎன்ஜிசிக்கு 731 சதுர கி.மீ. அளவுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, “முதல் சுற்று ஓஏஎல்பி ஒப்பந்தத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல்வேறு நிறுவனங்கள், சுமார் ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் உயரும். விவசாயிகள் தங்கள் எல்லைக்கோடு களுக்குள் நின்று செயல்பட்டால், ஹைட்ரோகார்பன் எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்றார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறித்து அமைச்சர் மிக சுருக்கமாக பதில் அளித்தார். அங்குள்ள மூன்று இடங்களும் கடல் பகுதியில் வருவதாகவும், அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.

ஆனால், ஒப்பந்த நிகழ்ச்சியின் போது, ஹைட்ரோகார்பன் எடுப்பது குறித்து படவிளக்கக் காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அதில், ஓஎன்ஜிசிக்கு அளிக்கப்பட்டது நிலப் பகுதியில் (On Shore) வருவதாகவும், வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டும் கடல் பகுதியில் (Off Shore) வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

வேதாந்தா சார்பில் அதன் தலைவர் அனில் அகர்வால் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் தங்கள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 இடங்களுக்கான ஒப்பந்தத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து தமிழக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அனில் அகர்வால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து மட்டும் பேசினார்.

அப்போது அகர்வால் கூறும் போது, “ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படும் என நம்புகிறேன். அங்கு நடக்கும் தாமிர உற்பத்தியால் யாருக்கும் ஆபத்து ஏற்படாது. அது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Leave a Response