சினிமாவின் வளர்ச்சிக்கு நல்ல கதைகளும் திறமையான இயக்குநர்களும் அவசியம் – ஆர்.டி.ராஜா பேட்டி

ரெமோ, வேலைக்காரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தைத் தயாரித்துகொண்டிருக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தங்களது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளனர்.

இப்படத்தை,இயக்குநர்கள் ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ்சிவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரபுராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

இப்படத்தின் சிறப்பம்சம், இந்திய சினிமாவே போற்றிக் கொண்டாடும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும்.

தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இப்படம் குறித்துச் சொல்லும்போது,

தேர்ந்த,பெரும் வெற்றிகளைப் பெற்ற இயக்குநர்களுடன் பிரபுராதாகிருஷ்ணனை ஒப்பிடலாம். அவரது திறமையும்,சினிமா மீது இருக்கும் காதலும்,வெறித்தனமாக உழைப்பதிலும் அவரது வெற்றி நிச்சயிக்கப்படுகிறது. இவரைப் போன்ற திறமைசாலிகளுடன் பணியாற்றுவதில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. சினிமாவின் வளர்ச்சிக்குத் திறமையான இயக்குநர்களும், நல்ல கதைகளும் மிகவும் அவசியம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.

இயக்குநர் பிரபுராதாகிருஷ்ணன் படம் பற்றிப் பேசுகையில்,ஆர்.டி.ராஜாவின் திறமையினாலும் அசுர உழைப்பினாலும் ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ குறுகிய காலத்திலேயே பெரிய உயரங்களைத் தொட்டுள்ளது. ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

இது ஒரு விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காதல் படம். பி.சி.ஸ்ரீராம் சார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்தக் கதையில் காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஒளிப்பதிவு பெரிய பங்கு வகிக்கும்.

இப்படத்தில் இசையின் பங்கும் பிரதானமாக இருக்கும். அதனால் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு மிக முக்கிமானதாகவும், பேசப்படும் விஷயமாகவும் இருந்து இப்படத்திற்குப் பலம் சேர்க்கும்.

ஆர்.டி.ராஜா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனமும் எழுதியுள்ளார். அவருக்குள் இருக்கும் அந்த அருமையான கதாசிரியர் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தப்படத்தின் மூலம் மக்களுக்கும் அது தெரியவரும்.

இளைஞர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ள நிவின்பாலி இப்படத்திற்குப் பெரும் பலமாக இருப்பார். ‘ப்ரேமம்’ படத்தின் இமாலய வெற்றி அவருக்குக் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி வடஇந்தியாவில் கூட ரசிகர்களை உருவாக்கியுள்ளது.

படத்தின் நாயகி மற்றும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரை விரைவில் உறுதிசெய்ய உள்ளோம். படப்பிடிப்புக்கு முன்பான பணிகள் தொடங்கியுள்ளது. 2018 ஜனவரி முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

Leave a Response