ரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி


சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு மூன்று ஆவணப் படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளி (ஜூன் 16) முதல் 10வதுகேரள சர்வதேச ஆவணப்பட – குறும்பட விழா நடைபெற உள்ளது. இத்தகைய விழாக்களில் தணிக்கைச் சான்றிதழ் பெறாத படங்களும் திரையிடப்பட்டு, விவாதிக்கப்படும். விருதுகளும் வழங்கப்படும். ஆனால், எந்தெந்தப் படங்களைத் திரையிடுவது என அனுமதிவழங்கும் அதிகாரம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம்தான் உள்ளது.

அந்த அமைச்சகத்தின் அனுமதிச் சான்றிதழ் பெற்ற படங்களை மட்டுமே இந்தியாவில் நடைபெறும் சர்வதேச விழாக்களில் திரையிட முடியும்.கேரள விழாவில் பங்கேற்கஅனுமதி கோரி சுமார் 200 படங்களுக்கான விண்ணப்பங்கள் அமைச்சகத்திற்குச் சென்றன. அவற்றில் மூன்றே மூன்று படங்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படங்கள் எப்படிப்பட்டவை என்று பார்த்தாலே பாஜக அரசின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை அரசியல் புரிந்துவிடும்.

‘தி அன்பேரபிள் பீயிங் ஆஃப் லைட்னெஸ்’ (ஒளிச்சுடரின் தாங்க முடியாத வாழ்க்கை) – ராமச்சந்திரா பி.என். தயாரித்த இந்த 45 நிமிட ஆவணப்படம், ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீண்டாமைக் கொடுமைக்கு தனது உயிரை பலியாக்கிய ரோஹித் வெமுலா வாழ்க்கை பற்றியதாகும்.

அந்தச்செய்தி வந்ததிலிருந்தே, சாதியப்பாகுபாடு எதுவும் இல்லை என்று மறுப்பது முதல் ரோஹித் வெமுலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே இல்லை என்பது வரையில் பல வகையிலும் பிரச்சனையை மூடி மறைக்கவே மத்தியஅரசு முயன்றது என்பது நினைவுகூரத்தக்கது.

“தி ஷேட் ஆஃப் ஃபாலன் சினார்’ (வீழ்ந்த சினார் ஏரியின் நிழல்) – இயக்குநர்கள் பாசில் என்.சி., ஷான் செபாஸ்டியன் இருவரும் தயாரித்த இந்தப் படம், ஒரு எளிய காஷ்மீர் கிராமத்து மக்களின் அமைதியானவாழ்க்கை சீர்குலைக்கப்பட்டது பற்றி 16 நிமிடங்களில் சொல்கிறது. அவர்களது போராட்டத்தை எல்லா வழிகளிலும் ஒடுக்கிக்கொண்டிருக்கிற மத்திய அரசுஇந்தப் படத்திற்கும் அனுமதியளிக்க மறுத்திருக்கிறது.

‘மார்ச் மார்ச் மார்ச்’ (நடைபோடு நடைபோடு நடைபோடு) என்ற படம், தில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் கன்னய்ய குமார் தலைமையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தையும், அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததையும் சொல்கிறது.

இந்தத் தடை குறித்துக் கருத்துக்கூறியுள்ள, இந்த விழாவை நடத்துகிற கேரள மாநில கலாச்சித்ரா அகடமி தலைவரும் திரைப்பட இயக்குநருமான கமல்என்ற கமலுதீன், “நாட்டில் நிலவுகிற கலாச்சார அவசர நிலை ஆட்சிநிலைமையைத்தான் இது காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

“சகிப்பின்மை பற்றிப் பேசுவதால்தான் இந்தப் படங்ளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். அனுமதி மறுப்பு முடிவை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அமைச்சகத்திடம் முறையீடு செய்ய உள்ளோம்,” என்றும்அவர் கூறினார்.

தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செய லாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசின் பண்பாட்டு ஒடுக்கு முறை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த ஆவணப்படங்களையும் திரையிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விமர்சனங்களை மறுவிமர்சனங்களால் எதிர்கொள்வதற்கு மாறாக, விமர்சனங்களே எழவிடாமல் தடுப்பது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கே முட்டுக்கட்டையாகிவிடும். மாற்று விமர் சனங்களை வைக்கத் திராணியின்றி இப்படி கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிற நேர்மையற்ற செயல் கடும் கண்டனத்திற்கு உரியது” என்று கூறியுள்ளனர்.

Leave a Response