முந்திரிக்காடு பட நடிகரின் கண்ணீர்க்கதை

பூமணி, பூந்தோட்டம் உட்பட பல படங்களை இயக்கிய மு.களஞ்சியம்,தற்போது முந்திரிக்காடு படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகரைப் பற்றிய அவருடைய பதிவு நெகிழவைக்கிறது. திரைப்பட நடிகர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள உதவும் அந்தப்பதிவு….

முந்திரிக்காடு திரைப்படத்தில் கதாநாயகனை விட அதிகம் காட்சிகளில் நடித்துள்ள ஆக சிறந்த கலைஞன்.
தோழர் மணிமாறன் அவர்களின் ”புத்தர் கலைக்குழு”வில் நான் சந்தித்த தம்பி சக்திவேல்.
எறையூர் கலவரம் நடந்து முடிந்த ஆண்டு என்று நினைக்கிறேன்.புத்தர் கலைக்குழுவின் மணிமாறன் அவர்கள் என்னை அங்கு நடந்த கலை இரவுக்கு அழைத்து இருந்தார்.இரவு நான் சென்றிருந்தேன்.சாதி மறுப்பு திருமணம் செய்திருந்த காதல் தம்பதியருக்கு ”கண்ணகி முருகேசன்” விருது வழங்கி பேசினேன்.என்னுடன் தோழர் இகன் இருந்தார்.அப்போது தான் நான் சக்திவேல் என்கிற மகத்தான பறையிசை கலைஞனை சந்தித்தேன்.
முந்திரிக்காட்டுக்காக அவன் செய்த தியாகங்களை எழுதும் போதே நெஞ்சை அழுத்துகிறது.தலை நிறைய கம்பிபோல நீண்ட சுருட்டை முடி, முகமெல்லாம் தாடி என பார்க்க சகிக்காத தோற்றம்.இது தான் எனது கதாபாத்திரம் ”செங்குட்டுவன்” தோற்றம்.
படபிடிப்புக்கான வேலைகள் தொடங்கும் முன்பே,
நான் விபத்துக்கு உள்ளாகி விட்டேன்.இனி படம் எடுக்க மாட்டேன் என பலர் தாடி முடியை எடுத்துவிட்டு போய் விட்டார்கள்.சக்திவேல் மட்டும் நம்பிக்கையோடு அப்படியே இருந்தான்.
நான் மரணத்தோடு போராடி மீண்டேன்.”முந்திரிக்காடு” திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கியது.முழு முகத்தையும் மறைக்கும் சுருட்டை முடி,முகமே தெரியாத அளவுக்கு தாடி என்று செங்கு கதாபாத்திரமாக சக்திவேல் வாழத்துவங்கினான்.
வாழ்க்கை அவனுக்கு பல நெருக்கடிகளை கொடுத்தது.
ஒரு புறம் பெத்த தாய்க்கு புற்றுநோய்.அவள் மரணத்துக்குள் திருமணம் செய்து விட வேண்டும் என்கிற கட்டாய சூழல்.
தாடி முடியோடு பரதேசி பெயலை போல சுத்துற இவனுக்கு என் படித்த மகளை தர மாட்டேன் என்கிற மாமனார்.
காதலித்த பெண் மலர்விழியோ தாடி,முடியா?நானா? என்று கேட்கிறாள்.
”முந்திரிக்காடு”படம் முடியட்டும் என்று சக்திவேல் ஒரு மௌனப்போராட்டம் நடத்துகிறான்.
அம்மாவுக்கு உடல் நிலை மிக மோசமாகிறது.பெத்த தாயை தூக்கிக்கொண்டு கேரளாவுக்கு ஓடுகிறான்.சென்னைக்கு வருகிறான்.
”அண்ணா அம்மா சாவறத்துக்குள் நம்ம படம் வந்துருமாண்ணா???” என்று ஒரு நாள் என்னிடம் கேட்டான்.
”ஏன்டா தம்பி இப்பிடி கேட்கிறாய்?”என்று நான் கலங்கி நின்றேன்.
படப்பிடிப்பை வேகப்படுத்த நினைக்கிறேன்.கையில் போதுமான பணம் இல்லை.நானே தயாரிப்பாளர் என்பதால் தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.இந்த நேரத்தில் அம்மாவுக்கு உடல் நிலை மோசமாகிறது.தஞ்சையிலே படபிடிப்பில் சக்திவேல்.”அம்மாவுக்கு முடிஞ்சுடும் போல இருக்கு நீ உடனே வா” என்று திருவண்ணமலையில் இருந்து அழைப்பு வர.இரவோடு இரவாக தம்பி ஓடுகிறான்?அடுத்தநாள் படபிடிப்பு நிற்கிறது.
எப்பிடியாவது மகன் நடிக்கும் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய தாய் சாகப் போகிறாள்.
அதைவிடசாகும் முன் மகன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த தாயின் எண்ணமும் நிறைவராமல் போவதற்கு ”செங்கு கெட்அப் ”தடையாக நிற்கிறது.
மரணப்படுக்கையில் அம்மா இருக்கும் பொது…சக்திவேல் காதலித்த பெண் மலர்விழி ஒரு முடிவெடுக்கிறாள். ”அம்மா சாவறத்துக்குள் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.நான் வர தயார்” என்கிறாள்.சக்திவேல் என்னை அழைத்து விடயத்தை சொல்லுகிறான்.நான் சரியான முடிவு, பிழை ஒன்றும் இல்லை…உடனே செய் என்கிறேன்.அந்த பெண் மலர்விழி தான் சக்திவேலின் இரண்டாவது தாய்… அவள் தன் வீட்டை விட்டு வெளியே வருகிறாள்.மரணப்படுக்கையில் கிடக்கும் சக்தியின் அம்மாவின் கால்களில் விழுந்து வணக்குகிறாள்…சக்தியின் கரம் பற்றுகிறாள்.அம்மாவின் ஆசிர்வாதத்தோடு இருவரும் மாலை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அம்மா ஆனந்த கண்ணீரோடு மகிழ்கிறாள்.
அன்று மாலை சக்திவேல் என்னை அழைக்கிறான்.
”அண்ணா நான் படபிடிப்புக்கு நாளை வந்து விடுகிறேன்” என்கிறான்.
நான் பதட்டமாக மறுக்கிறேன்.
”அம்மா நல்லா இருக்குண்ணா…ஒரு சிக்கலும் இல்லை என்கிறான்.
.”உன் மனைவி எங்கே என்று கேட்டேன்..”அவள் அவங்க வீட்டுக்கு சென்று விட்டாள்” என்று சொன்னான்…..”பதிவு திருமணம் செய்து விட்டேன்.யாருக்கும் தெரியாது”என்றான்.
அடுத்தநாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சக்திவேல் வந்துவிட்டான்.
அவனை இறுக்கி கட்டிப்பிடித்தேன்.
திருமணமான செய்தி அனைவருக்கும் என் மூலமாக கசிந்தது.மொத்த ”முந்திரிக்காடு” குடும்பமும் வாழ்த்துகிறது.
கொஞ்ச நேரத்தில்,
சக்திக்கு ஒரு அழைப்பு வருகிறது.”அம்மா நம்மள விட்டுட்டு போயிருச்சுண்ணா”….என்கிற அழுகுரல்.
தம்பி நிலைகுலைந்து போகிறான்.
”நான் உன்ன வர வேண்டாம் அம்மா பக்கத்துல இருடான்னு சொன்னேனே தம்பி…ஏன் வந்தாய்???” என நான் அழுகிறேன்.
சக்திவேல் ஓடுகிறான்.
எப்படியாவது தனது மகன் நடிக்கிற ”முந்திரிக்காடு” திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என ஏங்கிய எங்களின் அன்பு தாய் இப்போது எங்களை விட்டு போய் விட்டாள்.
மரண வீடு.
துயரம் தாங்காமல் சக்திவேல் தனது மன வலிகளை எல்லாம் ஒன்று திரட்டி,கதறியபடி பெற்ற தாய்க்காக ஓங்கி ஓங்கி பறையை அடித்து வாசிக்கிறான்.
நண்பர்கள் தடுத்து பறையை வாங்குகிறார்கள்.
இறுதியாக,
தாய்க்கு தலைமகன் மொட்ட போட்டு கொல்லி வைக்க வேண்டும் என .உறவுகள் அனைத்தும் திரண்டு நின்று ஒரே குரலில் சொல்லுகிறது…
”முடியாது” என்கிறான் சக்திவேல்.
”ஏன்?” என கேட்கிறார்கள்.
”படப்பிடிப்பு இன்னும் மீதி இருக்கிறது.”..என்கிறான் சக்திவேல்..
”அடப் பாவி உனக்கு பெத்த தாய விட படம் பெரிசா?” என சுடுகாட்டில் வைத்து, ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.
”அதெல்லாம் முடியாது மொட்ட போட்டே ஆகணும்” என்கிறார்கள் கிராமத்து மக்கள்.
வாய் சண்டையாகிறது.சக்திவேல் அழுது மறுக்கிறான்.
”தாய் பாசம் இல்லாத மிருகம்” என்கிறார்கள்.உறவுகள் எல்லாம் கேவலமாக பேசுகிறார்கள்.
சக்திவேல் பிடிவாதமாக இருந்து விட்டான்.
நான் படபிடிப்பை முப்பது படையல் முடியும் வரை தள்ளி வைத்தேன்.
தம்பி சக்திவேல் அதே தாடி பரட்டை தலையுடன் மீண்டும் படபிடிப்புக்கு வருகிறான்.
”அண்ணா” என என்னை கட்டிகொண்டு ஒரு சிறு குழந்தை போல அழுகிறான்.
”விடுடா தம்பி அம்மா உன்ன நடிகனா பார்க்க ஆசைப்பட்டுச்சு மன்னிச்சுடும்” என்றேன்.
அடுத்து படப்பிடிப்பு முடிந்ததும் நேராக நான் சக்திவேலின் வீட்டுக்கு சென்று அப்பாவை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு,
சக்திவேலின் மாமனாரை சந்தித்தேன்.சக்தி ஏன் இப்படி ஒரு கெட்டப்பில் இருக்கிறான் என்பதை எடுத்து சொன்னேன்.
அவர் உணமையாவே அவன் சினிமாவில் நடிக்கிறான் என்பதை அப்போது தான் நம்பினார்.
இப்போது சக்திக்கு தனது மகள் மலர்விழியை மகிழ்வோடு திருமணம் செய்து கொடுத்து விட்டார்.
இப்படியாக ”முந்திரிக்காடு” படத்துக்காக தாய்க்கு கொள்ளிவைத்து விட்டு மொட்டை போடாமல் வந்து நடித்த.அன்பு தம்பி சக்திவேலின் குரல் பதிவு நேற்றோடு (05-06-2017) முடிந்தது.
சக்திவேல் மிக சிறப்பாக நடிக்க வில்லை…மாறாக வாழ்ந்திருக்கிறான்.
சக்திவேலுக்கு என் வாழ்த்துக்கள்.
”தாயை தண்ணீர் துறையில் பார்த்தால் பிள்ளையை வீட்டில் போய பார்க்கணும்” என்பார்கள்.அது போல புத்தர் கலை குழுவில் பயணித்தவன் எப்படி சோடைபோவான்??????
நான் நன்றி சொல்ல வேண்டியது சக்திவேலுக்கு அல்ல.
புத்தர் கலைக்குழு தோழர்.மணிமாறனுக்கு.
நன்றி தோழர் மணிமாறன்.
—மு.களஞ்சியம்.

Leave a Response