வெங்கையாநாயுடு சந்திப்பும் வேலைநிறுத்தமும் – திரையுலகினர் குழப்பம்

தமிழ்த் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (ஏப்ரல் 26)
நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு 6 கோரிக்கைகளும் மாநில அரசுக்கு 8 கோரிக்கைகளும் வைத்தனர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். அன்று முதல் திரையரங்குகளில் படங்கள் ஓடாது, படப்பிடிப்புகளும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம் என்று அறிவித்தார்.

இம்முடிவு இன்று எடுக்கப்பட்டது, இரண்டு நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 23) திரைப்படத் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் நடந்தது.

இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி மற்றும் கதிரேசன், கே.ஈ.ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, ஏ.எம்.ரத்னம், எல்.சுரேஷ், மற்றும் நடிகர் உதயா, ஸ்ரீமன், நடிகை குட்டிபத்மினி, டைரக்டர் பிரியதர்ஷன், காட்ற கட்ட பிரசாத், பன்னீர் செல்வம் உள்ளிட்ட திரையுலகினர் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது, வெங்கையா நாயுடுவிடம் திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் திரைப்படத் துறையினருக்கு குறைந்தபட்ச வரி நிர்ணயம் செய்வது, சிறு தியேட்டர்கள் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அளித்தனர். செவாலியர் விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

இரண்டுநாட்களில் போராட்ட அறிவிப்பு வருகிறது.

இதுகுறித்து திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர்,வெங்கையாநாயுடுவைச் சந்தித்த இரண்டுநாட்களில், அவசர அவசரமாக எல்லோரையும் கூப்பிட்டு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதனால், வெங்கையாநாயுடு சந்திப்பில் நடந்தது என்ன? என்கிற கேள்வி வருகிறது. இவர்கள் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று கூறினார்.

Leave a Response