
கண்ணுள்வினைஞர் என்ற தூய தமிழ்ச்சொல் சிறுபானாற்றுப்படையில் வருகிறது. ஓவியர்களைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த் துறை ஆகியன சார்பில் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை “செவ்வியல் இலக்கியங்களில் புலப்படும் அழகியல் பரிமாணங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசும்போது இதைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் பேசியதாவது….
அழகியல் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை, பக்தி இலக்கியங்கள், நவீன இலக்கியத்தில் குறிப்பாக பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் பரவிக் கிடக்கிறது.தொடக்க காலங்களில் கவி, ரசனை, வனப்பு, அழகு, எழில் போன்ற சொற்கள் அழகியலைக் குறிப்பதாக இருந்தன. ஓவியம், சிற்பம், கவின்கலை, கவிதை, இசை, நாட்டியம் போன்ற கலைகளின் ஊடே அழகியல் பொதிந்து கிடக்கிறது. திரு.விக-வின் முருகன் அல்லது அழகு, பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு போன்ற நூல்கள் நவீன இலக்கியத்தில் அழகியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இலக்கணத்தில் வெண்பாவும், ஆசிரியப்பாவும் அழகியல் நடை கொண்டவை. ஓவியர் என்பதற்கு கண்ணுள்வினைஞர் என்ற தூய தமிழ்ச்சொல் சிறுபானாற்றுப்படையில் வருகிறது. இதுபோன்ற நல்ல தமிழ்ச் சொற்களை மறந்து ஆங்கில, வடமொழிச் சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.
வா.செ.குழந்தைசாமி கூறியதைப்போல, நமது இல்லங்களுக்குள் இயந்திரக் கருவிகள் வந்த பின்னர் நமது மரபு வாய்ந்த தமிழ்ச்சொற்களை இழந்து வருகிறோம். அறிவியலை மதிக்க வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தவேண்டும். அதேவேளையில் நமது மொழிச் சொற்களையும் பாதுகாக்கவேண்டும். இது இன்றைய ஒவ்வொரு இளைஞரும், தங்களது உள்ளத்தில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டிய செய்தி. நம்முடைய மொழி, பண்பாடு பேணுவது ஒவ்வொரு இளைஞரின் கடமை. எனவே, நிறைய படிக்க வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டுóம். அப்போதுதான் நமது எதிர்கால சமுதாயம் இனம், மொழி, உணர்வோடு வாழும் என்றார்.


