இட்ட சாவங்கள் இணைந்து கூடி முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி.  அடுத்து…..

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்

குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்

கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!

திடுமென நினையொரு நீச்சூழல் சூழ்க!

சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்

வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்

சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!

திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்

நொந்துயிர் துடிக்கையில் உனக்குலை நொய்ந்தே

இட்ட சாவங்கள் இணைந்து கூடி

முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

தமிழினம் தகைக்கும் தருக்களே! நின்குடி

அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!

தணலும்எம் நெஞ்சின் தவிப்பை

மணல், நீர், நீ வளி, வானம் ஆற்றுகவே!

-பெருஞ்சித்திரனார்

தென்மொழி சுவடி: 24, ஓலை: 3 மார்ச்சு ஏப், 1988

 

Leave a Response