தங்கல் எப்படி நல்ல படமாக இருக்கமுடியும்?

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தங்கல்’. 2016 டிசம்பர் 25 இல் வெளியானது இப்படம்.

இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் குரல்மாற்று செய்து இப்படம் வெளியானது. எல்லா இடங்களிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மஹாவீர் சிங், கீதா, பபிதா ஆகியோரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டபடம் ‘தங்கல்.’

மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தர நினைக்கிறார் மஹாவீர் சிங் (அமீர்கான்). ஆனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. தேசிய வீரர் என்ற எல்லையோடு நிற்கவேண்டியதாகிறது. தனக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்குப் பயிற்சி கொடுத்துஇந்தியாவிற்காகத் தங்கம் வென்றிட நினைக்கிறார். அவருக்குப் பிறக்கிற நான்கு குழந்தைகளும் பெண் என்பதால் தன் லட்சியத்தை இரும்புப் பெட்டியில் பூட்டிவிடுகிறார்.

இப்படிப்பட்டவர் தனது இரண்டு பெண் குழந்தைகளை நட்சத்திரங்களாக உருவாக்க உழைக்கத் தொடங்குவதே கதையின் மையம். சிறுமிகளான கீதா, பபிதா என்ற அவரது இரண்டு மகள்கள்,இருவருக்கும் மல்யுத்தப் பயிற்சியை ஆரம்பிக்கிறார். அவர்கள் தந்தையின் சொல்லுக்காகப் பயிற்சிக்கு வருகிறார்களே தவிர மனதளவில் ஈடுபட வில்லை. இதனால் அவர்களின் தோற்றத்தை மாற்றுகிறார் தந்தை. அது உளவியல்பூர்வமாக பலனளிக்கிறது.கடைசியில் அவருடைய விருப்பப்படி இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் வெல்கிறார் கீதா.

இப்படத்தை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் படம் என்று வேறு சொல்கிறார்கள்.

இக்கதையின்படி, தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தம் குழந்தைகளைத் தயார் செய்கிறார். அவர்களுடைய குழந்தைப் பருவத்தையே கொலை செய்கிறார் ஒரு தந்தை.

இதைச் செய்திருப்பது யார்?

எதிர்காலம் ஒன்றை மட்டுமே மனதில் இருத்தி குழந்தைகளின் அழகான சின்னஞ்சிறு உலகம் பாழாக்கப்படுவது எவ்வளவு கொடுமை. இதை அவ்வளவு அழகாக அக்கறையாக தாரே ஜமீன்பர் படத்தில் பேசியவர் அமீர்கான்.

தங்கள் குழந்தைகளின் மீது தங்களுடைய விருப்பைத் திணித்து,டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற கருத்தை த்ரீ இடியட்ஸ் படத்தின் மூலம் சொன்னவர் அமீர்கான்.

அவர்தான் தங்கல் படத்தில் தம்முடைய விருப்பத்துக்காக தம் குழந்தைகளின் குழந்தைமையைக் கொலை செய்கிறார்.

இந்தப்படத்தை எப்படி நல்ல படம் என்று கொண்டாட முடியும்?

அமீர்கானின் சந்தைப்படுத்தும் உத்தியால் இந்தப்படம் நன்றாக வசூல் செய்யலாம். ஆனால் நல்ல படமாக இருக்கமுடியாது. தான் சொன்ன கருத்தையே உடைத்து நொறுக்கி ஒரு படம் கொடுக்க உண்மைக்கதை என்ற போர்வைக்குள் அவர் பதுங்கலாம். ஆனாலும் அவர் சமூக அக்கறையற்ற ஓர் வியாபாரியே என்பதை இப்படம் மூலம் தெரிவித்துவிட்டார்.

Leave a Response