
மலையாளத்தில் வெளிவந்த வெளிமூங்க என்ற படத்தின் தமிழாக்கம்தான் இந்தப் படம். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்ராகவன்.
சுந்தர் சி-யின் தந்தையும், தாத்தாவும் அரசியலில் பிரபலமாக வேண்டும் என முயன்று, அது முடியாமல் போகிறது. அதனால் சுந்தர் சி-யை அரசியல் வாடை படாமல் வளர்க்கிறார் அவரது அம்மா. ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து நடந்து வரும் போது அவருக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து சுந்தர் சி-க்கு அரசியல் ஆர்வம் வருகிறது.
இதனால் அரசியலில் சாதிக்க வேண்டும் என ஒரு கட்சியில் சேர்கிறார் சுந்தர் சி. இவருக்கு அரசியல் எதிரியாக இருப்பவர்கள் அண்ணன் தம்பியான சிங்கம் புலி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர். சிங்கம் புலி, விடிவி கணேஷ் இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் எதிரெதிர் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் நல்ல விஷயங்களை மக்களிடையே விளம்பரம் செய்ய முயற்சிக்கும் போது இடையில் சுந்தர் சி புகுந்து அந்த புகழைத் தட்டிச் செல்கிறார்.
இப்படி இருக்கும் போது ஒரு நாள் நாயகி பூனம் பாஜ்வா மீது முதல் பார்வையில் காதல் வசப்படுகிறார் 40 வயதான சுந்தர் சி. பூனம் பாஜ்வாவை திருமணம் செய்ய பொண்ணு கேட்டு அவர் வீட்டுக்கு செல்லும் இடத்தில் பூனம் பாஜ்வாவின் அப்பாவாக வருபவர் சுந்தர் சி உடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். தன்னுடன் படித்தவனே தன் பொண்ணை கேட்டு வந்ததால் ஆத்திரப்படும் பூனம் பாஜ்வாவின் அப்பா, நீ அரசியலில் பெரிய ஆளாக வா, அப்புறம் என் பொண்ண உனக்கு கட்டித் தாரேன் என அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
இதனையடுத்து தேர்தலில் சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கும் சுந்தர் சி தேர்தலில் வெற்றி பெற்றாரா, பூனம் பாஜ்வாவை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் கதை.
நகைச்சுவை கலந்த அரசியல் கதை. சுந்தர். சி இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். சேலையில் வரும் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் போதுமான அளவு தந்திருக்கிறார்.
முக்கியமாக சுந்தர் சி உடன் இருக்கும் சதீஷ் வயதை வைத்து சுந்தர் சி-ஐ கிண்டல் செய்யும் காட்சிகள் சிரிப்பு. சிங்கம் புலி, விடிவி கணேஷ் காமெடி கலந்த வில்லனாக வருவது படத்திற்கு கூடுதல் பலம். சித்தார்த் விபினின் இசை சொல்லும்படியாக இல்லை. ஒளிப்பதிவாளர் பானு முருகன் காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார்.
வயதுக்கேற்ற வேடம், நகைச்சுவை, கதாநாயகியின் கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள், அங்கங்கே அரசியல் நையாண்டிகள் ஆகியன ஒரு வெற்றிப் படத்துக்குப் போதுமானவை என்று சுந்தர்.சி நினைத்திருக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகளில் நாகரிகத்தைக் கடைபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


