குஷ்புவை குழப்பிய திருமாவளவன் – பழைய நினைவுகள்

குஷ்பு – அன்றும் இன்றும்..காலத்தின் கோலம் என்பது இதுதான்.

மனுதர்மத்தை விமர்சித்த தோழர் திருமாவளவனின் கருத்தைச் சிதைத்து அவர் பெண்களுக்கு எதிராக – கலாச்சாரத்துக்கு எதிராக – பேசிவிட்டார் என்று கூறி சங் கூட்டம் குதித்துக்கொண்டிருக்கிறது. அதன் முகமாக இன்று அறியப்படுகிறார் குஷ்பு.

மீண்டும் எதிரெதிர் நிலையில் குஷ்புவும் திருமாவும் என்கிற இந்தக் காட்சி எனக்கு பழைய நினைவுகளைக் கிளறியது. 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் குஷ்புவும் இப்படி எதிரெதிர் அணியிலிருந்து பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்கள் அப்படி பேசிய மேடைகளில் ஒன்று ஆழி பதிப்பகத்தின் மேடை. அப்போது நடந்த நிகழ்ச்சி பரபரப்பான செய்தியாக மாறியது.

அது 2008 ஜனவரி மாதம். ஒரு வயதுகூட ஆகாத ஆழி பதிப்பகம் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எட்டு நூல்களை வெளியிட ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்வில் நூல்களை வெளியிடவும் பெறவுமாக பலர் கலந்துகொண்டார்கள். இன்று எம்.பி.களாக இருக்கும் தோழர்கள் திருமாவளவன், கனிமொழி. தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர்கள் கல்யாண்ஜி. ராஜேந்திரசோழன், அறிவுமதி என்கிற அந்தப் பட்டியல் நீண்டது. அந்த நிகழ்வில் குஷ்புவும் கலந்துகொண்டார்.

வெவ்வேறு எழுத்தாளர்கள் வேவ்வேறு பிரபலங்களை தங்கள் நூல்களை வெளியிட அழைத்திருந்தார்கள் ஒரு பதிப்பாளராக அதை நான் ஏற்பாடு செய்தேன். அப்படித்தான் திருமாவும் குஷ்புவும் ஒரே மேடையில் தோன்றும் நிலை உருவானது.

அதில் என்ன “சிறப்பு” என்றால், அது விடுதலைச் சிறுத்தைகளும் குஷ்புவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஒரு காலம் அது. திருமணத்துக்கு முந்தைய பாலுறவுகள் குறித்து இந்தியா டுடே இதழில் குஷ்பு கூறிய ஒரு கருத்துக்காக, அவரை பாமக, விசிக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்த காலம் அது. குஷ்பு கூறியது தமிழ் கலாச்சாரத்தை அவமானப்படுத்தும் செயல் என்று கூறி அவருக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். வழக்குகளைப் போட்டார்கள். மிகவும் பரபரப்பாக அந்த மோதல் நடந்தேறிக்கொண்டிருந்தது. எனவே எங்கள் நிகழ்வில் இருவரும் கலந்துகொள்வது என்பது இயல்பிலேயே சர்ச்சைக்குரிய விஷயமாக ஆகிவிட்டது. ஆனால் நான் திட்டமிட்டு அதையெல்லாம் செய்யவில்லை நண்பர்களே!

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, தனது நூற்றுக்கணக்கான தொண்டர்களோடு திருமாவளவன் உள்ளே நுழைந்தார், நாங்கள் அனைவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்து முகமன் கூறியபோது. அவரை உதாசீனப்படுத்தும் தோரணையில் குஷ்பு அமர்ந்திருந்தார் என்பது கூட்ட அரங்கிலேயே ஒரு பெரிய பிரச்சினையாக வெடித்தது. விசிக தொண்டர்கள் குஷ்பு தங்கள் தலைவரை அவமதித்துவிட்டார் என்று கொதித்தார்கள்.

குஷ்புவின் பேச்சு தொடக்கத்திலிருந்தே புயலாக இருந்தது. திருமணத்துக்கு முந்தைய உறவுகள் குறித்து தான் அப்படிப்பேசியதில் தவறில்லை, நான் உண்மையைத்தான் கூறினேன் என்று குஷ்பு கூற, மறுபடியும் அரங்கம் போர்க்களமானது. கட்டுக்கடஙகாத அமளியால் நான் திகைப்படைந்து, செய்தவறியாது அமர்ந்திருந்தேன்.

குஷ்பு பேசத்தொடங்கும்போதே அவையின் உணர்வை புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அந்த நேரத்தை தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற முனைப்புடனும் இருந்தார். எதிர்த் தரப்பினருக்கு பதில் தரும் வாய்ப்பாக அந்த நேரத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார். எனவே சீறினார்.

இந்த அமளி நடந்துகொண்டிருந்தபோது, அதை திருமா எப்படி எதிர்கொண்டார்?

அதுதான் சிறப்பான ஒரு சம்பவம்.

குஷ்புவுக்கும் விசிக தொண்டர்களுக்கும் இடையிலான வாக்குவாதம் உச்சத்தை அடைந்தபோது, சட்டென்று எழுந்து சென்று மைக்கை பிடித்த திருமா, ஓங்கிய குரல் கொடுத்து முதலில் தங்கள் தொண்டர்களை அமைதியாக்கினார். பிறகு ஓர் அரைமணி அவர் பேசியபேச்சு, அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பதைக் காட்டியது.

குஷ்பு கூறிய கருத்து தவறானதல்ல என்று பேசிய திருமா, அதை அவர் வெளிப்படுத்திய விதம் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது என்றும் எனவே அவர் பொறுப்போடு பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குஷ்புக்கும் தொண்டர்களுக்கும் ஒரே சேரப் பாடமெடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். எனக்கு அப்புறம்தான் மூச்சே வந்தது.

அந்தப் பேச்சு குஷ்புவையும் குழப்பிவிட்டது! திருமா அந்த நிகழ்வில் குஷ்புவை தாக்கவில்லை, மாறாக அவருக்கு அறிவுரைசொன்னார். தொண்டர்களும் ஒருவாறு சமாதானமானது போல தோன்றியது.

பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான நாங்கள் ஒரு வேலை செய்தோம். நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தீண்டப்படாத நூல்கள் என்கிற புத்தகத்தை திருமா வெளியிட குஷ்பு பெற்றுக்கொள்வார் என்று நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்வை நான் அறிவித்தேன்.

ஸ்டாலின் நூலை வெளியிடத்தான் திருமா வந்திருந்தார். நண்பர் ஆனந்த நடராஜன் (இந்தியா டுடே தமிழ் எடிட்டர்) எழுதிய எசப்பாட்டு என்ற நூலை வெளியிட குஷ்பு வந்தார். கனிமொழியும் தமிழச்சியும் வேறு நூல்களை வெளியிட வந்திருந்தார்கள். ஆனால் கனிமொழியும் தமிழச்சியும் இணைந்திருக்க, திருமா வெளியிட, குஷ்பு பெற்றுக்கொள்ள என கிளைமாக்ஸை மாற்றினோம்.

அந்த வாரத்தோட பெரிய நியூஸ் அதுதான். நக்கீரனும் ஜூவியும் தலைப்பு்கட்டுரைகள் வெளியிட ஆழிக்கு மிகப்பெரிய விளம்பரமும் கிடைத்தது.

இன்றைய நிலையை யோசித்துப்பாருங்கள்.

குஷ்பு விவகாரத்தில். சனாதனக் கருத்துகளுக்கு ஆதரவாக அன்று விசிக இருந்தது என்று பல காஸ்மோபாலிட்டன் விமர்சர்கள் குற்றம்சாட்டினார்கள். தொண்டர்கள் மத்தியில் எப்படி இருந்திருந்தாலும் தலைவர் திருமா குஷ்புவின் கருத்தையும் கருத்துரிமையையும் ஆதரித்தே பேசினார் என்பதை நாங்கள் நேரிலேயே கண்டோம். இன்றும் அவர் தொடர்ந்து சனாதன கலாச்சாரத்துக்கும் ஆணாதிக்கக் கலாச்சாரத்துக்கும் எதிராகவே பேசுகிறார்.

ஆனால் அன்று போராளியாக சீறிய குஷ்பு, பிறகு தன்னை பெரியாரிஸ்ட் என்று அறிவித்துக்கொண்ட குஷ்பு, இன்று திருமாவுக்கு எதிராக நிற்கிறார்! சனாதனத்துக்கு ஆதரவாக!

பிரபலவாத அரசியலின் எல்லை அதுதான்.

-ஆழி செந்தில்நாதன்

Leave a Response