
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.
2026 மே 12 ஆம் தேதியிட்ட அதில்,முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டார்.இது தொடர்பான நிபந்தனைகள்,விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் வியூகம்,வார் ரூம் பணிகளை ரூட் அமைப்பின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி செய்து வருகிறார்.விஜய்யின் திரைப்படம் முதல் அரசியல் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் நிழலாகவும்,அவரது மிக நெருங்கிய மேலாளராகவும் பயணித்து வருகிறார்.
தவெகவின் தேர்தல் வெற்றிக்காகத் திரைமறைவில் உழைத்த ஜெகதீஷுக்கு தற்போது கோட்டையிலும் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக ஜெகதீஷ் பழனிசாமி நேற்று தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.அந்தப்பதிவு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
ரத்தன் பண்டிட் என்ற சோதிடரை தனது (முதல்வரின் அரசியல் பிரிவு) சிறப்புப் பணியாளர் அதிகாரியாக கடந்த மாதம் 12 ஆம் தேதி விஜய் நியமித்தார்.இதற்கு சட்டப்பேரவையிலும்,சமூகவலைத்தளங்களிலும் கடும்எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்தப்பதவியில் இருந்து ரத்தன் பண்டிட்டை நீக்கி அவர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் முதல்வரின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய்யின் விவாகரத்துக்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்கிற சர்ச்சை இருக்கிறது.
அண்மையில்,நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் பற்றி வெளிப்படையாக விமர்சித்தார்.
அவர் இதுகுறித்துக் கூறியதாவது….
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு ஆள் இருக்கிறார்.அவர் சமூக ஊடகங்களில் கும்பல்களை உருவாக்கிப் பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்.சினிமாவில் நடிக்கத் துடிக்கும் பெண்களுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார் அந்த நபர்.
சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.நாங்கள் ஆளுங்கட்சியினர் அல்ல.ஒருவரது வாழ்வையும் அழிக்க விரும்பும் கட்சியும் அல்ல.முதலமைச்சரின் கீழ் பணிபுரியும் ஒருவர், இணையதளங்களில் பெண்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். சினிமா கனவுகளுடன் வரும் பெண்களுக்குப் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு தருவதாகப் பொய் கூறிப் பலரின் வாழ்க்கையைத் தறிகெட்டுப் போகச் செய்துள்ளார்.
அவரது பெயரை நேரடியாகச் சொல்ல விரும்பவில்லை.நீங்கள் கேட்பதால்’மிஸ்டர் ஜெ’ என்று சொல்கிறேன். பெண்கள் பலரும் அந்த ‘ஜெ’ என்ற நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாஃபியா அமைப்பை நடத்தி வருகிறார். கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தருவதாகக் கூறிப் பலரின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டார்.எனது சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒரு பெண்,பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரைப் போன்றவர்களின் தொல்லைகளால் அந்தப்பெண் தனது ஊருக்கே சென்றுவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இவ்வளவு சர்ச்சைக்குரிய ஒருவருக்கு அரசாங்க சம்பளம் வாங்கும் பொறுப்பு கொடுத்திருப்பது மேலும் சர்ச்சையாகியிருக்கிறது.


